செய்திகள்
புதுச்சேரி போக்குவரத்து கழக பேருந்துகள்

புதுச்சேரி போக்குவரத்து ஊழியர்களின் வேலை நிறுத்த போராட்டம் வாபஸ்

Published On 2019-09-21 09:41 GMT   |   Update On 2019-09-21 09:41 GMT
புதுச்சேரி போக்குவரத்து ஊழியர்களின் வேலை நிறுத்த போராட்டம் இன்று மதியம் வாபஸ் பெறப்பட்டது.
புதுச்சேரி :

புதுவை அரசின் சார்பு நிறுவனமாக சாலை போக்குவரத்து கழகம் செயல்பட்டு வருகிறது. அரசின் சாலை போக்குவரத்து கழகத்தின் மூலம் புதுவை நகர பகுதி, கிராம பகுதி மற்றும் கடலூர், விழுப்புரம், சென்னை, காரைக்கால், பெங்களூரு, மாகி, நாகர்கோவில் உள்ளிட்ட நகரங்களுக்கு பஸ்கள் இயக்கப்படுகிறது.

ஒட்டுமொத்தமாக சாலை போக்குவரத்துக்கழகத்தின் சார்பில் 140 பஸ்கள் நாள்தோறும் இயக்கப்பட்டு வருகிறது. அரசு போக்குவரத்து கழகத்தில் பணியாற்றும் நிரந்தர, ஒப்பந்த ஊழியர்களுக்கு கடந்த 3 மாதமாக சம்பளம் வழங்கப்படவில்லை.

சம்பளத்தை மாதந்தோறும் வழங்க வேண்டும் என ஊழியர்கள் வலியுறுத்தி வந்தனர். சம்பளம் வழங்காததால் ஊழியர்களின் குடும்பத்தில் பொருளாதார சிக்கல் ஏற்பட்டது.

ஏற்கனவே ஒரு டிரைவர் தற்கொலை செய்து கொண்டார். 3 நாட்களுக்கு முன்பு செக்யூரிட்டி ரமேஷ் தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதையடுத்து போக்குவரத்துக்கழகத்தில் உள்ள அனைத்து சங்கங்களும் ஒருங்கிணைந்து சம்பளத்தை உடனடியாக வழங்க வேண்டும் என வலியுறுத்தி காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்தனர்.

இதன்படி நேற்று முன்தினம் மதியம் முதல் போக்குவரத்து கழக ஊழியர்களின் வேலைநிறுத்த போராட்டம் தொடங்கியது. இன்று 3-வது நாளாக ஊழியர்களின் போராட்டம் தொடர்ந்தது. இதனால் பயணிகள் அவதிக்குள்ளாகினர்.

இந்நிலையில், புதுச்சேரி போக்குவரத்து ஊழியர்களின் வேலை நிறுத்த போராட்டம் இன்று மதியம்  வாபஸ் பெறப்பட்டது.
Tags:    

Similar News