செய்திகள்
தங்க தமிழ்ச்செல்வன்

விஜய் துணிச்சலை பாராட்டுகிறேன்- தங்க தமிழ்ச்செல்வன்

Published On 2019-09-20 07:38 GMT   |   Update On 2019-09-20 07:38 GMT
நடிகர் விஜய் தவறு நடக்கும் போது கண்டிக்க வேண்டும் என்று வெளிப்படையாக சொன்னதை வரவேற்பதாக தங்க தமிழ்ச்செல்வன் பாராட்டியுள்ளார்.
சென்னை:

பேனர் பற்றி விஜய் விமர்சனம் செய்தது பற்றி தி.மு.க. செய்தி தொடர்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் கூறியதாவது:-

நடிகர் விஜய் கருத்தை நியாயமான கருத்தாக பார்க்கிறேன். காரணம் பிளக்ஸ் பேனர் வைத்தவர் மீது நடவடிக்கை இல்லை. ஆனால் இதை அச்சடித்த அச்சகத்துக்கு சீல் வைக்கிறார்கள். இது போகாத ஊருக்கு வழி சொல்வது போல் தவறான அணுகுமுறை.

நடிகர் விஜய் துணிச்சலாக மாநிலத்தை ஆண்டு கொண்டிருக்கிற அரசாங்கத்தின் அவல நிலையை தைரியமாக சொல்லி காட்டியதற்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.

அண்மையில் தி.மு.க. சார்பில் முப்பெரும் விழா திருவண்ணாமலையில் நடைபெற்றது. சுபஸ்ரீ இறந்த சமயத்தில் இந்த விழா நடைபெற இருந்தது. அன்று இரவு திருவண்ணாமலையில் மாவட்ட செயலாளர் ஏ.வ.வேலு ‘பிளக்ஸ்’ போர்டு நிறைய வைத்திருந்தார்.

இந்த செய்தியை கேட்டு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உடனே எங்கேயும் பிளக்ஸ் போர்டு வைக்க கூடாது, கட்-அவுட் வைக்க கூடாது. மீறி வைத்தால் விழாவுக்கு வரமாட்டேன் என்று கூறிவிட்டார். ஒரே நாள் இரவில் அத்தனை பேனரையும் கழற்றி விட்டனர். வெறும் கொடி மட்டும்தான் திருவண்ணாமலையில் இருந்தது. அதன் பிறகே கூட்டத்துக்கு வந்தார்.

அந்த மாதிரி ஒரு அணுகு முறையை கட்சியின் தலைமை பின்பற்ற வேண்டும். அதைவிட்டு விட்டு ‘பிளக்ஸ்’ அச்சடித்தவர் மீது மட்டும் வழக்கு போடுகிறீர்கள். பேனர் வைத்தவரை கண்டு கொள்ளாமல் உள்ளனர்.

காரணம் ஆளும் கட்சி பிரமுகர்தான் அந்த நிகழ்ச்சியை நடத்துகிறார். அவருக்கு திருட்டு மணல் எடுக்க, பிராந்திக்கடை வைக்க அனுமதி கொடுத்திருப்பீர்கள். அந்த வருமானத்தில் அவர் பேனர் வைத்து வரவேற்றுள்ளார். அதனால்தான் அவர் மீது நடவடிக்கை எடுக்க பயப்படுகிறீர்கள்.



அதனால்தான் நடிகர் விஜய் வெளிப்படையாக இந்த மாதிரி தவறு நடக்கும் போது கண்டிக்க வேண்டும் என்று வெளிப்படையாக சொன்னதை வரவேற்கிறேன்.

இது பிளக்ஸ் போர்டு பிரச்சனையை மட்டும் சார்ந்ததில்லை. அரசாங்கம் செய்யக்கூடிய தவறுகளை கண்டிக்கும் துணிச்சல் விஜய்க்கு உள்ளதை பாராட்டுகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News