செய்திகள்
மின்னல்

திண்டுக்கல் மாவட்டத்தில் தொடர் மழை- மின்னல் தாக்கி 11 ஆடுகள் பலி

Published On 2019-09-16 10:31 GMT   |   Update On 2019-09-16 10:31 GMT
திண்டுக்கல் மாவட்டத்தில் பெய்த தொடர் மழையினால் மின்னல் தாக்கி 11 ஆடுகள் பலியாகின.

திண்டுக்கல்:

திண்டுக்கல் மாவட்டத்தில் கடுமையான வெப்பம் வாட்டி வந்த நிலையில் கடந்த 3 நாட்களாக திண்டுக்கல் மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை பெய்தது. 4-வது நாளாக நேற்றும் மாலையில் சுமார் 1 மணி நேரம் கனமழை பெய்தது.

அதன்பிறகு லேசான இடைவெளிக்கு பின் மீண்டும் சாரல் மழை பெய்தது. இந்த மழை நள்ளிரவு வரை நீடித்தது. இதனால் நகரின் பல பகுதிகளில் மழை நீர் வெள்ளம்போல் தேங்கி நின்றது.

வறண்டு கிடந்த மழை நீர் சேகரிப்பு குளங்களில் தண்ணீர் அதிக அளவு தேங்கியது. மாலை நேரத்தில் பெய்த மழையினால் நகர் முழுவதும் இருளில் மூழ்கி வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி மெதுவாக சென்றன. சில இடங்களில் கடைகளின் மேற்கூரைகள் இடிந்து விழுந்தன.

நத்தம் பகுதியிலும் கடந்த சில நாட்களாக மாலை நேரங்களில் பலத்த மழை பெய்து வந்தது. லிங்கவாடியை சேர்ந்தவர்கள் பாப்பு, பாலு ஆகியோர் ஆடுகள் வைத்து வளர்த்து வருகின்றனர். நேற்று பெருமாள்மலைக்கு ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து சென்றனர்.

மாலையில் ஆடுகள் திரும்பாததால் சந்தேகம் அடைந்து மலைப்பகுதிக்கு சென்று பார்த்தனர். அப்போது இடி, மின்னல் தாக்கி 11 ஆடுகள் இறந்து கிடந்தது தெரியவந்தது. இது குறித்து வருவாய்த்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் அதிகாரிகள் அங்கு சென்று ஆய்வு செய்தனர்.

இதேபோல் வேடசந்தூர், வடமதுரை, கொடைக்கானல், வத்தலக்குண்டு உள்ளிட்ட பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Tags:    

Similar News