செய்திகள்
போலி சாமியார் ஆனந்தன்

தோ‌ஷம் கழிக்க பூஜை - 30 பெண்களிடம் 100 பவுன் நகைகளை பறித்த போலி சாமியார்

Published On 2019-09-16 06:35 GMT   |   Update On 2019-09-16 06:35 GMT
தோ‌ஷம் கழிக்க பூஜை செய்வதாக கூறி, 30 பெண்களிடம் 100 பவுன் நகைகளை கொள்ளையடித்த போலி சாமியாரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அண்ணாநகர்:

அமைந்தகரை பொன்னுவேல் தோட்டத்தில் உள்ள முத்து கருமாரியம்மன் கோவிலில் பூசாரியாக இருந்தவர் ஆனந்தன்.

இவர் கோவிலுக்கு வரும் பெண்களிடம் திருமண தோ‌ஷம் நீங்க பரிகார பூஜை மற்றும் குடும்ப பிரச்சினைகள் தீரவும் சிறப்பு பூஜை செய்வதாக கூறி வந்தார்.

இதனை நம்பிய அப்பகுதி மக்கள் ஆனந்தனை வீட்டுக்கு அழைத்து சிறப்பு வழிபாட்டை நடத்தினர். இதேபோல் அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் வீட்டில் தோ‌ஷம் கழிக்க ஆனந்தனை அழைத்தார்.

அப்போது அவர் தோ‌ஷம் நீங்க தங்க நகையை சிறிய கலசத்தில் வைத்து பூஜை செய்தார். மேலும் அதனை 21 நாட்கள் கழித்து பார்க்க வேண்டும் என்று கூறினார்.

இதனை நம்பிய அந்த பெண் 21 நாட்கள் கழித்து கலசத்தை பார்த்தபோது நகை மாயமாகி இருந்தது. இதுபற்றி பூசாரி ஆனந்தனிடம் கேட்டபோது, பூஜையை நீங்கள் முழு திருப்தியுடன் ஈடுபடவில்லை என்று சமாளித்து சென்றுவிட்டார்.

நூதன முறையில் நகையை அபேஸ் செய்த ஆனந்தன் குறித்து அமைந்தகரை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் ஆனந்தனை கைது செய்து விசாரணை நடத்தினர்.

அப்போது அவர் 30-க்கும் மேற்பட்ட பெண்களிடம் 100 பவுனுக்கு மேல் நகைகளை அபேஸ் செய்து இருப்பது தெரிந்தது. சுருட்டிய நகைகளை அவர் அடகு கடையில் வைத்து பணம் பெற்று ஜாலியாக செலவு செய்து இருக்கிறார்.

நகைகளை மீட்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். போலி சாமியார் ஆனந்தனிடம் ஏமாந்தவர்கள் பற்றிய விபரத்தையும் சேகரித்து வருகிறார்கள்.
Tags:    

Similar News