செய்திகள்
யானை கூட்டம்

கொடைக்கானல் அருகே குடியிருப்பு பகுதியில் புகுந்த யானை கூட்டம்

Published On 2019-08-19 10:25 GMT   |   Update On 2019-08-19 10:25 GMT
கொடைக்கானல் அருகே யானை கூட்டம் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து வருவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

கொடைக்கானல்:

கொடைக்கானல் அருகே அஞ்சுவீடு, பேத்துப்பாறை, அஞ்சுரான்மந்தை, பாரதிஅண்ணாநகர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் காய்கறிகளை பயிரிட்டுள்ளனர்.

இதன் அருகே வனப்பகுதியில் இருந்து வரும் வன விலங்குகள் அடிக்கடி விவசாய பயிர்களை சேதப்படுத்தி செல்கின்றன. குறிப்பாக காட்டு பன்றி, காட்டெருமை மற்றும் யானைகள் அட்டகாசத்தால் விவசாயிகள் கடும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர்.

அஞ்சுவீடு, பேத்துப்பாறை பகுதியில் யானைகள் நிரந்தமாக முகாமிட்டுள்ளன. இந்த யானைகளை வனத்துறையினர் அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட முயற்சி எடுத்து வருகின்றனர். ஆனால் தொடர்ந்து இப்பகுதியிலேயே உலா வருகின்றன.

இப்பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில் 10-க்கும் மேற்பட்ட யானைகள் குட்டிகளுடன் முகாமிட்டுள்ளது. கூட்டத்தில் ஒரு யானைக்கு உடல்நிலை சரியில்லாததால் உடல் தளர்ந்து காணப்படுகிறது. இதனால் மற்ற யானைகள் அந்த யானையை பாதுகாத்து வருகின்றன. இந்த யானைகள் அடிக்கடி இரவு நேரத்தில் குடியிருப்பு பகுதிக்குள் உலா வருவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்து வருகின்றனர்.

இதனால் விவசாயிகள் தோட்ட காவலுக்கு செல்லாமல் வீடுகளிலேயே முடங்கி உள்ளனர். ஒருசிலர் உறவினர்கள் வீடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். இப்பகுதியில் முகாமிட்டுள்ள யானைகளை நிரந்தரமாக வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என மலை கிராம மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Tags:    

Similar News