செய்திகள்
தினகரன்

பால் கொள்முதலில் நடைபெறும் ஊழலை தடுத்தாலே விலை உயர்வை தவிர்க்கலாம்- தினகரன் பேட்டி

Published On 2019-08-18 10:51 GMT   |   Update On 2019-08-18 10:51 GMT
தமிழக அரசு பால் விலையை திடீரென உயர்த்தி உள்ளது. பால் கொள்முதலில் நடைபெறும் ஊழலை தடுத்தாலே விலை உயர்வை தவிர்க்கலாம் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

சுவாமிமலை:

கும்பகோணம் அருகே உள்ள சுவாமிமலையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;-

தமிழக அரசு பால் விலையை திடீரென உயர்த்தி உள்ளது. இது பொதுமக்களை பாதிக்கும் வகையில் உள்ளது. இதனால் மற்ற அத்தியாவசிய பொருட்களும் விலை உயரும். எனவே தமிழக அரசு உடனடியாக பால் விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும்.


பால் கொள்முதலில் நடைபெறும் ஊழலை தடுத்தாலே விலை உயர்வை தவிர்க்கலாம். மத்திய- மாநில அரசுகளுக்கு விவசாயிகள் மீது எந்த அக்கறையும் இல்லை. அ.தி.மு.க. அரசு தங்களை காப்பாற்றி கொள்ளவே நேரம் சரியாக இருக்கிறது. தற்போது இருக்கிற ஆட்சியாளர்கள் கருப்பு பட்டியலில் இடம் பெறுவார்கள்.

டெல்டா மாவட்டங்களில் விவசாயிகளை பாதிக்கும் மீத்தேன் ஹைட்ரோ கார்பன் திட்டங்களை மாநில அரசின் உதவியோடு மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இதனால் விவசாயிகள் விவசாயம் செய்ய முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே விளை நிலங்களில் மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டங்களை செயல் படுத்தாமல், அந்த திட்டங்களை யாரையும் பாதிக்காத வண்ணம் கடல் பகுதிகளில் மத்திய அரசு நடைமுறைப்படுத்த வேண்டும்.

அரசியலில் வெற்றி- தோல்வி என்பது சகஜம்தான். குறிப்பாக எங்கள் தொண்டர்கள் யானை பலத்தில்தான் இருக்கிறார்கள். அடுத்து வரும் தேர்தலில் வெற்றி பெற்று எங்கள் பலத்தை காட்டுவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதைத்தொடர்ந்து நிருபர்கள் அவரிடம், அமைச்சர் மணிகண்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டது குறித்து கேட்டனர். அதற்கு டி.டி.வி.தினகரன் பதிலளிக்க மறுத்து ‘இதை முதல்- அமைச்சரிடம் தான் நீங்கள் கேட்க வேண்டும் என்றார்.

Tags:    

Similar News