செய்திகள்
துணை ஜனாதிபதியை வரவேற்ற தமிழக ஆளுநர்

சென்னை வந்த துணை ஜனாதிபதிக்கு உற்சாக வரவேற்பு

Published On 2019-08-10 11:08 GMT   |   Update On 2019-08-10 11:08 GMT
புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்க சென்னை வந்த துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
சென்னை:

துணை ஜனாதிபதியாக வெங்கையா நாயுடு பதவி ஏற்று 2 ஆண்டுகள் ஆகிறது. இந்த 2 ஆண்டுகளில் நமது நாட்டில் 330 பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு இருக்கிறார். 4 கண்டங்களில் உள்ள 19 நாடுகளுக்கு பயணம் செய்துள்ளார். மாநிலங்களவை தலைவராகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.

துணை ஜனாதிபதியாக வெங்கையா நாயுடு 2 ஆண்டுகளில் செய்த பணிகளை ஆவணப்படுத்தும் வகையில் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் தகவல் ஒலிபரப்பு துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் ஏற்பாட்டில், “கவனித்தல், கற்றல் மற்றும் தலைமையேற்றல்” எனும் தலைப்பில் புத்தகம் தயாரிக்கப்பட்டது.

இந்த புத்தக வெளியீட்டு விழா சென்னை கலைவாணர் அரங்கத்தில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 10.30 மணிக்கு நடக்கிறது. விழாவுக்கு துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு தலைமை தாங்குகிறார். மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா புத்தகத்தை வெளியிடுகிறார்.

இந்த விழாவில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் முக்கிய விருந்தினர்களாக பங்கேற்கின்றனர்.

இந்நிலையில், நாளை நடைபெறவுள்ள புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள துணை ஜனாதிபதி வெங்கைய நாயுடு இன்று சென்னை வந்தார். ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மற்றும் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் ஆகியோர் சால்வை அணிவித்தும், பூங்கொத்து கொடுத்தும் வரவேற்றனர்.
Tags:    

Similar News