செய்திகள்
விசாரணை

பிரம்மதேசம் அருகே குட்டையில் பிணமாக கிடந்த மாணவி: போலீசார் விசாரணை

Published On 2019-08-05 12:07 GMT   |   Update On 2019-08-05 12:07 GMT
பிரம்மதேசம் அருகே குட்டையில் மாணவி பிணமாக கிடந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மரக்காணம்:

விழுப்புரம் மாவட்டம் பிரம்மதேசம் அருகே உள்ள டி.நல்லாளம் காலனியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி, கூலி தொழிலாளி. இவரது மனைவி துர்க்காதேவி. இவர்களுக்கு கவிதா (வயது 10) என்ற மகள் இருந்தாள்.

இவள் திண்டிவனத்தல் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தாள். நேற்று முன்தினம் மாலையில் தாயார் துர்க்காதேவி மகள் கவிதாவிடம் அருகில் உள்ள கடையில் சென்று கருவேப்பிலை வாங்கி வரும்படி கூறினார்.

மாணவி கவிதா தாயாரிடம் பணத்தை வாங்கி கொண்டு கடைக்கு சென்றாள். வெகுநேரமாகியும் கவிதா வீடு திரும்பவில்லை. இதனால் கவலையடைந்த துர்க்காதேவி மகளை பல இடங்களில் தேடிபார்த்தார். எங்கும் அவளை காணவில்லை.

இதனைத்தொடர்ந்து பிரம்மதேசம் போலீசில் துர்க்காதேவி புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து மாயமான மாணவியை தேடி வந்தனர்.

இந்த நிலையில் அங்குள்ள குட்டையில் கவிதா பிணமாக கிடப்பதை அப்பகுதி மக்கள் பார்த்தனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் துர்க்காதேவி மற்றும் அவரது உறவினர்கள் விரைந்து சென்று குட்டையில் பிணமாக கிடந்த கவிதாவின் உடலை பார்த்து கதறி அழுதனர்.

மாணவி குட்டையில் பிணமாக கிடப்பதை அறிந்த போலீசாரும் விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் மருத்துவகல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

திண்டிவனம் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) விஜி, குட்டையில் மாணவி மர்மமான முறை யில் பிணமாக கிடந்தது குறித்து விசாரணை நடத்தினார். மேலும் அந்த பகுதியை சேர்ந்த சிலரை பிடித்து விசாரணை மேற்கொண்டார்.

மாணவியை யாராவது கடத்தி சென்று கொலை செய்து பின்னர் உடலை குட்டையில் வீசி சென்றிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள். இது தொடர்பாக அந்த பகுதியை சேர்ந்த சிலரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இருப்பினும் மாணவியின் பிரேத பரிசோதனை அறிக்கை வந்தபிறகுதான் மாணவி எப்படி இறந்தாள் என்பது தெரியவரும்.

குட்டையில் மாணவி பிணமாக கிடந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News