செய்திகள்
திருமாவளவன்

பாராளுமன்றத்தில் எல்லா மசோதாக்களையும் அ.தி.மு.க. ஆதரிப்பது அதிர்ச்சி அளிக்கிறது - திருமாவளவன்

Published On 2019-07-26 20:10 GMT   |   Update On 2019-07-26 20:10 GMT
பாராளுமன்றத்தில் எல்லா மசோதாக்களையும் அ.தி.மு.க. ஆதரிப்பது அதிர்ச்சி அளிக்கிறது என்று திருமாவளவன் எம்.பி. தெரிவித்துள்ளார்.
சென்னை:

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:–

பாராளுமன்றத்தில் தகவல் அறியும் உரிமை சட்டம், தேசிய புலனாய்வு முகமை, முஸ்லிம் பெண்கள் பாதுகாப்பு சட்டம், மனித உரிமைகள் சட்டம் உள்ளிட்ட ஏராளமான மசோதாக்களை எதிர்க்கட்சிகளின் கடுமையான எதிர்ப்புக்கு இடையில் பெரும்பான்மை பலத்தை வைத்து பா.ஜனதா அரசு நிறைவேற்றுகிறது.

நிலைக்குழு விசாரணைக்கு அனுப்பவேண்டும் என்ற கோரிக்கையையும் கேட்கவில்லை. குறைந்தபட்ச ஜனநாயக அணுகுமுறையும் பா.ஜ.க.விடம் இல்லை. எதிர்க்கட்சிகளால் எதுவும் செய்ய முடியாத அளவுக்கு நாடாளுமன்றம் பா.ஜ.க.வின் கட்டுப்பாட்டில் உள்ளது. இது வேதனைக்குரியதாகும்.

எல்லா சட்ட மசோதாக்களையும் பா.ஜ.க.வின் கூட்டணி கட்சியும், தமிழகத்தின் ஆளும் கட்சியுமான அ.தி.மு.க. ஆதரிப்பது அதிர்ச்சி அளிக்கிறது.

பொது வாழ்வில் ஈடுபடுபவர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பது நெல்லை முன்னாள் பெண் மேயர் கொலை மூலம் வெளிப்படுகிறது. சட்டம், ஒழுங்கை பாதுகாப்பதில் தமிழக அரசு கூடுதல் கவனம் செலுத்தவேண்டும். வன்முறை, குற்றசெயல்களை அரசுடன் தொடர்புபடுத்த முயற்சிக்கவில்லை. ஆனால் அதை தடுக்க வேண்டியது அரசின் பொறுப்பு ஆகும்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News