செய்திகள்
சாலை மறியலில் ஈடுபட்ட கல்லூரி மாணவிகள்.

மாணவரை தாக்கியவர்களை கைது செய்யக்கோரி கல்லூரி மாணவ-மாணவிகள் சாலை மறியல்

Published On 2019-07-18 10:08 GMT   |   Update On 2019-07-18 10:08 GMT
தஞ்சையில் மாணவரை தாக்கியவர்களை கைது செய்யக்கோரி கல்லூரி மாணவ-மாணவிகள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

தஞ்சாவூர்:

தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள கணபதி அக்ரகாரத்தை சேர்ந்தவர் ராஜப்பா மகன் நித்திஷ் (வயது 20). இவர் தஞ்சை கரந்தையில் உள்ள கலைகல்லூரியில் பி..சி.ஏ. 3-ம் ஆண்டு படித்து வருகிறார். சம்பவத்தன்று இவர் பஸ்சுக்காக கரந்தை பஸ் நிறுத்தத்தில் நின்றபோது கரந்தையை சேர்ந்த சூர்யா உள்பட 3 பேர் பீர்பாட்டிலால் தாக்கினர். இந்த தாக்குதலில் காயம் அடைந்த நித்தீஷ் மருத்துவ கல்லூரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து சூர்யாவை கைது செய்தனர். இந்த சம்பவம் கல்லூரி மாணவர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. தாக்கியவர்களை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி வந்தனர்.

இந்த நிலையில் இன்று காலை மாணவ-மாணவிகள் கல்லூரிக்கு வந்தனர். ஆனால் வகுப்புக்குள் செல்லாமல் புறக்கணித்தனர். மாணவன் நித்தீசை தாக்கியவர்களை கைது செய்ய வேண்டும், மாணவர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கல்லூரி முன்புள்ள சாலையில் அமர்ந்து இந்திய மாணவர் சங்க மாவட்ட செயலாளர் அரவிந்த் சாமி தலைமையில் மறியலில் ஈடுபட்டனர். அப்போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷங்களை எழுப்பினர்.

தகவல் அறிந்து வந்த மேற்கு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். தாக்கியவர்களில் ஒரு வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார். மீதி உள்ள 2 பேரையும் விரைவில் கைது செய்வோம் என போலீசார் உறுதி அளித்தனர். இதை ஏற்று கொண்டு மாணவ-மாணவிகள் மறியலை கைவிட்டு கல்லூரிக்கு சென்றனர்.

இந்த மறியலால் அந்த பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News