செய்திகள்
ஆர்ப்பாட்டம்

மத்திய அரசை கண்டித்து திருச்சி துப்பாக்கி தொழிற்சாலை தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

Published On 2019-07-15 17:20 GMT   |   Update On 2019-07-15 17:20 GMT
பாதுகாப்புதுறையை தனியார் மயமாக்கும் மத்திய அரசை கண்டித்து திருச்சி துப்பாக்கி தொழிற்சாலை தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
திருவெறும்பூர்:

பாதுகாப்புத்துறையினை தனியார் மயமாக்கும்  மத்திய அரசின் தவறான  கொள்கையை கண்டித்து  திருச்சி துப்பாக்கி தொழிற்சாலை தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மத்திய அரசு கட்டுப்பாட்டில் 41 படைகலன் தொழிற்சாலைகள் இந்தியா முழுவதும் உள்ளது. இதில் திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள இலகுரக ஆயுதங் களைத் தயாரிக்கும் துப்பாக்கி தொழிற்சாலை  மற்றும் கனரக படைகலன் தொழிற்சாலையும் அடங்கும்.

இதனிடையே பாதுகாப்புத் துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கும் முயற்சியில் மத்திய அரசு முயன்று வரும் அதேநேரம்  அதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. பாதுகாப்புத்துறையினை தனியார்  மயமாக்கும் மத்திய அரசின் தவறான கொள்கையை கண்டித்து, துப்பாக்கி தொழிற்சாலை அனைத்து தொழிற் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் காமராஜரால் தோற்றுவிக்கப்பட்ட திருச்சி துப்பாக்கி தொழிற்சாலை வாயில் முன்பு காமராஜரின் பிறந்ததினமான இன்று காலை சுமார் ஆயிரத்திற்கு மேற்பட்ட தொழிலாளர்கள் ஒன்றுகூடி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  

இந்திய ராணுவம் மற்றும் துணை ராணுவத்திற்கு இங்கு தயாரிக்கப்படும் ஆயுதங்கள் அனுப்பப்பட்டு வரும் நிலையில், தனியார் மயமாக்கும் முயற்சியால் தொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்கள். மேலும் இன்று மாலை கூட்டு நடவடிக்கை குழு ஒன்று கூடி அடுத்த கட்ட போராட்டத்தை அறிவிக்கும் என்றும் எச்சரிக்கை விடுத்தனர். பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர்.
Tags:    

Similar News