செய்திகள்
திருச்சி விமான நிலையம்

திருச்சி விமான நிலையத்தில் ரூ.17 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்

Published On 2019-07-11 17:13 GMT   |   Update On 2019-07-11 17:13 GMT
திருச்சி விமான நிலையத்தில் ரூ.17 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக மலேசிய பெண் உள்பட 2 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
செம்பட்டு:

திருச்சி விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூர், மலேசியா, இலங்கை போன்ற வெளிநாடுகளுக்கும், சென்னை, கேரளா உள்பட உள்நாடுகளுக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து நேற்று முன்தினம் இரவு திருச்சிக்கு ஒரு தனியார் விமானம் வந்தடைந்தது.

அதில் வந்த பயணிகளிடம் திருச்சி விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது சென்னையை சேர்ந்த தியாகராஜன் என்பவர் 259 கிராம் தங்கத்தை தனது கைப்பையில் மறைத்து கடத்தி வந்தது தெரியவந்தது.

இதேபோல, மலேசியாவில் இருந்து மற்றொரு விமானத்தில் வந்த பயணிகளின் உடைமைகளை அதிகாரிகள் சோதனை செய்தபோது மலேசியாவை சேர்ந்த சரஸ்வதி வீரப்பன் என்ற பெண் 240 கிராம் எடை கொண்ட 8 வளையல்களை தனது கைகளில் அணிந்து மறைத்து கடத்தி வந்தது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து 2 பேரும் கடத்தி வந்த தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

கடத்தி வரப்பட்ட தங்கத்தின் மொத்த மதிப்பு ரூ. 17 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது. பிடிபட்ட மலேசிய பெண் உள்பட 2 பேரிடமும் விமான நிலைய அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News