செய்திகள்
சாலை மறியல்

தஞ்சையில் பாலத்தை சீரமைக்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்

Published On 2019-07-06 10:59 GMT   |   Update On 2019-07-06 10:59 GMT
தஞ்சையில் பாலத்தை சீரமைக்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தஞ்சாவூர்:

தஞ்சையில் போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில் ரெட்டிபாளையம்- தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலை இடையே பொதுப் பணித்துறை சார்பில் கல்லணை கால்வாய் புது ஆற்றின் மீது புதியபாலம் கட்டப்பட்டது. பாலத்தையொட்டி நெடுஞ்சாலைத்துறை சாலை அமைக்கப்பட்டது.

தற்போது இந்த பாலம் வழியாக பஸ்கள், கனரக வாகனங்கள் உள்பட அனைத்து வாகனங்களும் 24 மணி நேரமும் சென்று வருகின்றன.

இந்த நிலையில் பாலம்- சாலை இணையும் இடத்தில் பாலம் அரை அடி வரை கீழே இறங்கி விட்டதால் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனை கவனிக்காமல் செல்லும் ஆட்டோ, பால் வேன் உள்ளிட்ட வாகனங்கள் விபத்தில் சிக்கி வருகின்றன. இதில் அடிக்கடி பலர் காயமடைந்து வருகின்றனர். குறிப்பாக இரவு நேரங்களில் அதிக அளவில் விபத்து நடந்து வருகிறது. இதுபற்றி ரெட்டிபாளையம் பகுதி பொதுமக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் செய்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதைத்தொடர்ந்து ரெட்டிபாளையம் பொது மக்கள் திடீரென இந்த பாலத்தில் திரண்டு சாலை மறியல் போராட்டம் நடத்தினர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுபற்றிய தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கோரிக்கை தொடர்பாக மனு கொடுங்கள் . உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதி அளித்ததின் பேரில் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

அப்போது பாலத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்காவிட்டால் பெரிய அளவில் விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே இதுதொடர்பாக விரைந்து நடவடிக்கை எடுக்காவிட்டால் பஸ் மறியல் உள்பட பல்வேறு போராட்டம் நடத்துவோம் என்று ரெட்டிபாளையம் பொதுமக்கள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News