search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குடிநீர் தட்டுபாடு"

    • குடிநீர் வினியோகம் பாதிப்பால் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு வந்தனர்.
    • சங்கர பாண்டியன் ஆகியோர் தலைமையில் சாலை மறியல் செய்ய முயன்றனர்.

    நெல்லை:

    நெல்லை மாநகராட்சி யில் 55 வார்டுகள் உள்ளன.இதில் பாளை மண்டலத்துக்குட்பட்ட 32-வது வார்டில் கடந்த 6 மாதங்களாக முறையாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என்று கூறி அந்த வார்டு கவுன்சிலர் அனுராதா சங்கர பாண்டியன், மாநகராட்சி மேயர் மற்றும் அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்துள்ளார்.

    ஆனாலும் இதுவரை சீராக குடிநீர் வினியோகம் செய்யப்படாததால் அந்த பகுதி மக்கள் அவதி அடைந்து வந்தனர். அந்த வார்டு பகுதியில் சுமார் 5,000 வீடுகள் இருக்கும் நிலையில் குடிநீர் வினியோகம் பாதிப்பால் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு வந்தனர். தீபாவளி பண்டிகையை ஒட்டி பெரும்பாலான வீடுகளில் உறவினர்கள் வந்திருக்கும் நிலையில் தற்போது குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருவதாக பொதுமக்கள் புகார் கூறுகின்றனர்.

    இந்த நிலையில் இன்று காலை அந்த வார்டை சேர்ந்த ஏராளமான பெண்கள், கவுன்சிலர் அனுராதா சங்கர பாண்டியன் மற்றும் நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சங்கர பாண்டியன் ஆகியோர் தலைமையில் பாளை பஸ் நிலையம் அருகே திடீரென சாலை மறியல் செய்ய முயன்றனர்.

    இதனை அறிந்து அங்கு மாநகராட்சி அதிகாரிகள் விரைந்து வந்தனர். அப்போது போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்களிடம் மாநகராட்சி உதவி செயற்பொறியாளர்கள் தன்ராஜ், ராமசாமி உள்ளிட் டோர் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். ஆனாலும் அவர்கள் சமாதானம் அடையவில்லை.

    இதையடுத்து பாளை இன்ஸ்பெக்டர் வாசிவம் மற்றும் போலீசாரும் வந்து முறையாக குடிநீர் வினியோகம் செய்வதற்கு தேவையான நடவடிக்கை களை மேற்கொள்ள அறிவுறுத்தினார். தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்களிடம் அதிகாரிகள் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதில் உடன்பாடு ஏற்பட்டதால் அவர்கள் கலைந்து சென்றனர். இதற்கிடையே குடிநீர் குழாயில் அடைப்பு காரணமாக குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டு இருப்பதாக கூறி பஸ் நிலையம் அருகே பள்ளம் தோண்டப்பட்டு குழாய் அடைப்புகள் சரி செய்யும் பணி நடைபெற்றது. மேலும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்கு வதற்காக மாநகராட்சி லாரிகள் மூலமாக தண்ணீர் வினியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    ×