செய்திகள்

பிளாஸ்டிக் பால் கவர்களை பணம் கொடுத்து திரும்ப பெற முடிவு- ஆவின் நிறுவனம் அறிவிப்பு

Published On 2019-06-23 12:54 GMT   |   Update On 2019-06-23 12:54 GMT
சென்னையில் தினமும் 12 லட்சம் லிட்டர் பால் சப்ளை செய்யப்படுவதால் பிளாஸ்டிக் கவர்களை பணம் கொடுத்து திரும்ப பெற ஆவின் நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

சென்னை:

தமிழகத்தில் பிளாஷ்டிக் பொருட்களை பயன்படுத்தவும், விற்பனை செய்யவும் ஜனவரி 1-ந் தேதி முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.

எனினும் பால் மற்றும் எண்ணை பொருட்களுக்கு இந்த தடையில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பிளாஸ்டிக் கவர்கள் பயன்பாட்டை குறைக்க ஆவின் நிறுவனம் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.

ஏற்கனவே ஆவின் நிறுவனம் தனது விற்பனை நிலையங்களில் வாடிக்கையாளர்களுக்கு ஸ்டெய்ன்லெஸ் ஸ்டீல் கப்புகள் மற்றும் பீங்கான் கப்புகளை பயன்படுத்த ஆரம்பித்துள்ளது.

இதன் தொடர்ச்சியாக பயன்படுத்தப்பட்ட பால் பாக்கெட்டு கவர்களை திரும்ப பெற திட்டமிட்டுள்ளது. சென்னையில் ஆவின் நிறுவனம் தினமும் 12 லட்சம் லிட்டர் பால் சப்ளை செய்து வருகிறது.

பால்களை பயன்படுத்தும் குடும்பத்தினர் அதன் கவர்களை குப்பையில் வீசி வருகிறார்கள். அந்த கவர்களை திரும்ப பெற ஆவின் நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

பால் கவர்களை திரும்ப ஒப்படைப்பவர்களுக்கு அதற்கேற்ற பணத்தை திரும்ப வழங்குகிறது. இதற்காக 40 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளது.

இது குறித்து ஆவின் நிர்வாக இயக்குனர் சி.காமராஜ் கூறும்போது, உபயோகப்படுத்தப்பட்ட பால் கவர்களை திரும்ப பெற்று மறுசுழற்சி செய்ய முடிவு செய்துள்ளோம். இது கூடுதல் சுமை என்றாலும் மக்களிடம் பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்க ஊக்குவிக்கும் செயலாக பார்க்கிறோம்.

பால் சப்ளை செய்யும் ஊழியர்கள் இந்த பால் கவர்களை திரும்ப வாங்கி கொடுக்கும் போது அவர்களுக்கு ஊக்கத் தொகை கொடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இது தொடர்பாக வியாபாரி ஒருவர் கூறும்போது, ‘ஏற்கனவே பால் கவர்களை வாங்கி வருகிறோம். முன்பு ஒரு கிலோவுக்கு ரூ. 3 முதல் ரூ. 4 வரை கொடுத்தோம். தற்போது இது ரூ. 10 ஆக உயர்ந்துள்ளது.

பலர் இது தெரியாமல் குப்பையில் வீசி விடுகின்றனர். இனிமேல் பால் கவர்களை பொதுமக்கள் அதிக அளவில் சேகரித்து கொடுப்பார்கள்’ என்றார்.

Tags:    

Similar News