செய்திகள்

கருவை கலைக்க டாக்டர்கள் ஒப்புதல் தேவையில்லை - ஐகோர்ட்டு உத்தரவு

Published On 2019-06-22 00:07 GMT   |   Update On 2019-06-22 00:07 GMT
பாலியல் பலாத்காரத்தில் கர்ப்பம் அடையும் பெண்களின் 20 வாரத்துக்கு குறைவான கருவை கலைக்க டாக்டர்கள் குழுவின் ஒப்புதலை பெறத்தேவையில்லை என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை:

சென்னை போலீசில் ஒரு பெண் கொடுத்த புகாரில், ‘நவீத் அஹமத் என்ற வாலிபர், எனது மகளை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும், மகளின் படங்கள் மற்றும் வீடியோ காட்சி சிலவற்றை காட்டி மிரட்டி, பலமாதங்களாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறியிருந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இதற்கிடையில், பாலியல் பலாத்காரத்துக்கு ஆளான பெண் கர்ப்பம் அடைந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரது வயிற்றில் உள்ள கருவை கலைப்பதற்கு அனுமதி கேட்டு சென்னை ஐகோர்ட்டில் அவர் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு, அவரது கருவை கலைக்க டாக்டர்கள் பரிசீலிக்க இடைக்கால உத்தரவு பிறப்பித்தது.

இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி என்.ஆனந்த்வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது பாதிக்கப்பட்ட பெண் சார்பில் ஆஜரான வக்கீல் சுதா ராமலிங்கம், ‘பாலியல் குற்றங்களால் பாதிக்கப்படும் பெண்கள் கர்ப்பம் அடைகின்றனர். அந்த கருவை கலைக்க போலீசாரும், டாக்டர்களும் தேவையின்றி பாதிக்கப்பட்ட பெண்களை அலைக்கழித்து வருகின்றனர்.

20 வாரங்களுக்கு உட்பட்ட கருவை கலைக்க, பாதிக்கப்படும் பெண்கள் ஐகோர்ட்டை அணுகவேண்டிய சூழல் ஏற்படுகிறது. எனவே இதுதொடர்பாக ஐகோர்ட்டு தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும்’ என்று வாதிட்டார்.

இதையடுத்து நீதிபதி என்.ஆனந்த்வெங்கடேஷ் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட பெண் தனது வயிற்றில் உள்ள 8 முதல் 10 வாரம் வரையிலான கருவை கலைக்க கோரியுள்ளார். அந்த பெண்ணை போலீசார், திருவல்லிக்கேணியில் உள்ள கஸ்தூரிபாய் தாய் சேய் நல அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள், அப்பெண்ணுக்கு ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் உள்ள டாக்டர்கள் குழு தான் கருவை கலைக்க முடிவு செய்ய முடியும் எனக்கூறி கடிதம் கொடுத்துள்ளனர்.

ஆனால் போலீசார் அதன்பிறகு எந்த நடவடிக்கையும் எடுக்காததால் அப்பெண் நீதிமன்றத்தை நாடியுள்ளார். மத்திய அரசு சட்டப்படி 20 வாரங்களுக்கு மேற்பட்ட கருவை கலைக்க மட்டுமே டாக்டர்கள் குழுவின் ஆலோசனைகளை பெறவேண்டும். இந்த ஐகோர்ட்டையும் நாட வேண்டும்.



ஆனால் 20 வாரங்களுக்கு உட்பட்ட கருவை கலைக்க பாதிக்கப்பட்ட பெண்கள், டாக்டர்கள் குழுவை அணுகி ஒப்புதல் பெறவேண்டிய அவசியமில்லை. அதேபோல நீதிமன்றத்தையும் நாட வேண்டியதில்லை.

இதுகுறித்து டி.ஜி.பி. அனைத்து போலீசாருக்கும் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும். அதுபோல கருக்கலைப்பு விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புகள், மத்திய அரசு சட்டங்கள் குறித்து டாக்டர்களும் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News