செய்திகள்

அமமுகவில் இருப்பவர்களை மிரட்டி அதிமுகவில் சேர்க்கிறார்கள்- தினகரன் குற்றச்சாட்டு

Published On 2019-06-18 04:25 GMT   |   Update On 2019-06-18 04:25 GMT
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் இருப்பவர்கள் மிரட்டப்பட்டு அழைத்து செல்லப்படுவதாக டி.டி.வி.தினகரன் குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை:

அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கிருஷ்ணகிரியில் நிருபர்களிடம் கூறியதாவது:-

அ.தி.மு.க. கலகலத்து போயுள்ளது என்பது எல்லோருக்கும் தெரியும். அதனால்தான் தேர்தல் தோல்விக்குப்பிறகு எங்கள் கட்சி நிர்வாகிகளின் வீடு, வீடாகச் சென்று நாமெல்லாம் ஒன்றாக ஆகிவிடுவோம் என்று சொல்லி கேட்டுக்கொண்டிருக்கின்றனர்.

தருமபுரி மாவட்டம், கடத்தூர் பேரூராட்சியில் அ.தி.மு.க.வும், அ.ம.மு.க.வும் ஒன்றாக ஆக போகிறது என்று எங்கள் நிர்வாகிகளை அழைத்து சென்றுள்ளனர். அந்த நிர்வாகிகள் எல்லாம் திரும்பி வந்து தற்போது என்னை பார்த்தார்கள்.

ஆளுங்கட்சி கலகலத்து போனதால்தான் அ.ம.மு.க.வில் இருந்து நிர்வாகிகள் எங்களுடன் இணைகிறார்கள் என்று முதலமைச்சர் கூறுகிறார். ஆர்.பி.ஆதித்தன், பாப்புலர் முத்தையா, சொக்கலிங்கம் போன்றவர்களை மாவட்ட செயலாளர்கள், அமைப்புச் செயலாளர்களாக நியமித்திருந்தோம்.

மே 31-ந்தேதி எங்களது கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் சில மாவட்ட செயலாளர்கள் கட்சியில் பதவி அளிப்பதற்கு பணம் வாங்கினார்கள் என்ற குற்றச்சாட்டு இருக்கிறது. அதனையெல்லாம் விசாரித்து அது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப் போகிறேன் என்று தெரிவித்தேன்.

குறிப்பாக பாப்புலர் முத்தையா 2017, நவம்பர் 23 அன்று இரட்டை இலை சின்னம் அ.தி.மு.க.வுக்கு ஒதுக்கப்பட்டபோதே போக வேண்டியவர். காலம் தாழ்த்தி இப்போது சென்றிருக்கிறார்.

அம்மா காலத்தில் இருந்து மாவட்ட செயலாளராக இருந்த காரணத்தினால், எப்படி கலைராஜன் அவராக செல்லும்வரை காத்திருந்தோமோ அதுபோல பாப்புலர் முத்தையா அவராக செல்லட்டும் என்று காத்திருந்தோம். இது போல சில நிர்வாகிகள் அ.தி.மு.க.விற்கு சென்று விடுவார்கள் என்பது எங்கள் எல்லோருக்கும் தெரியும்.

கட்சியை விட்டு செல்வதற்கு காரணம் பாத்துக் கொண்டிருக்கிறார்கள். தேர்தலில் தோல்வி வந்தவுடன் மண்டலப் பொறுப்பாளர் மீது குறை சொல்லிவிட்டு கட்சியை விட்டு சென்று விட்டார்கள். மண்டலப் பொறுப்பாளர் நிர்பந்திப்பதையெல்லாம் நாங்கள் செயல்படுத்தவில்லை.

நான் என்ன சொல்கிறேனோ அதனைத் தான் அவர்கள் செயல்படுத்தினார்கள். உதாரணத்திற்கு இந்த மண்டலப் பொறுப்பாளராக பழனியப்பன் இருக்கிறார் என்றால், அவர் கட்சியில் ஏதாவது மாற்றம் செய்ய வேண்டும் என்று கேட்டால் அதனை விசாரித்து விட்டு சரியாக இருந்தால் மட் டும்தான் அதனை செயல்படுத்துவோம்.

கட்சி நிர்வாகத்தில் ஏதாவது குளறுபடி இருந்தால் அதனை சரி செய்ய வேண்டியது மண்டலப் பொறுப்பாளரின் பணி. தோல்வி அடைந்ததால் கட்சியைவிட்டு போக நினைக்கும் கொஞ்ச பேர் போகத்தான் செய்வார்கள்.

அன்று கூட நாங்குநேரியில் ஒன்றிய பொறுப்பாளர் அ.ம.மு.க.விலிருந்து விலகினார் என்று செய்தி போட்டார்கள். ஆனால் அவர், களக்காடு மூன்றடைப்பு கிளைச் செயலாளர் கிருஷ்ணனுடன் 20 பேர் கட்சியை விட்டு விலகியுள்ளனர். 100 பேர் கட்சியை விட்டு சென்றதாக முதல்-அமைச்சர் புகைப்படம் எடுத்துக் கொள்கிறார்.

தற்போதும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை காட்டித்தான் அரசியல் செய்ய வேண்டிய கட்டாயத்தில் அ.தி.மு.க. இருக்கிறது. ஆனால் அ.ம.மு.க. மூழ்கின்ற கப்பல், லெட்டர்பேட் கட்சி என்று அமைச்சர்கள் சொல்கின்றனர். லெட்டர்பேட் கட்சியிலிருந்து வருபவர்களையா வரிசை வரிசையாக வைத்து புகைப்படம் எடுத்து கொண்டிருக்கிறீர்கள்.

சிலர் மிரட்டப்பட்டு அழைத்து செல்லப்பட்டுள்ளனர். பாப்புலர் முத்தையா பல பினாமிகள் பெயரில் பார் வைத்திருக்கிறார். அதனால் தொழில் பாதிக்கப்பட்டு விடும் என்று கட்சி மாறுகிறார். எங்கள் கட்சியை விட்டு செல்லும் நிர்வாகிகள் பலர் நாங்கள் கட்சியை விட்டு எடுக்க வேண்டியவர்கள்தான். அவர்களாக செல்லட்டும் என்று நான் பெருந்தன்மையாக காத்திருக்கிறேன்.

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை பதிவு செய்ய விண்ணப்பித்துள்ளோம். நிர்வாகிகள் பட்டியலை புதிதாக நாங்கள் அறிவிக்க வேண்டும். உண்மையாக இந்த கட்சிக்காக பணியாற்றும் தொண்டர்களும், உண்மையான நிர்வாகிகள் யாரென்று அடையாளம் கண்டு அவர்களுக்கு கட்சி பொறுப்புகளை திருப்பி அறிவிக்க காத்திருக்கிறோம். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு ஏற்பட்டிருக்கிற அரசியல் நெருக்கடிகளை சமாளிக்க இது போன்று செயல்படுகிறார்கள்.

இவ்வாறு தினகரன் கூறினார்.
Tags:    

Similar News