செய்திகள்

பா.ஜனதா மீதான அதிருப்தியால் அதிமுகவுக்கு தோல்வி- அமைச்சர் சி.வி.சண்முகம் பேட்டி

Published On 2019-06-10 06:31 GMT   |   Update On 2019-06-10 06:31 GMT
பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா மீதான அதிருப்தியால் தான் அ.தி.மு.க.வுக்கு தோல்வி ஏற்பட்டதாக அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்தார்.
விழுப்புரம்:

நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் தேனியை தவிர மற்ற அனைத்து தொகுதியிலும் அ.தி.மு.க.-பா.ஜனதா கூட்டணி படுதோல்வி அடைந்தது.

பா.ஜனதா மீதான அதிருப்தியால் தான் அ.தி.மு.க.வுக்கு தோல்வி ஏற்பட்டதாக அமைச்சர் சி.வி.சண்முகம் நேற்று முன்தினம் பொதுக்கூட்டத்தில் பேசி இருந்தார்.

இந்தநிலையில் விழுப்புரத்தில் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

அ.தி.மு.க. வாரிசு அரசியல் நடத்தும் இயக்கமில்லை. இது தொண்டர்களால் உருவாக்கப்பட்டு தொண்டர்களால் நடத்தப்படுகின்ற இயக்கம் ஆகும்.

தொண்டர்களின் உணர்வுகளுக்கு மரியாதை கொடுத்து நடத்தி வரும் இயக்கம் அ.தி.மு.க. தான் எங்களுடைய இயக்கத்தை மறைந்த எம்.ஜி.ஆர். ஆரம்பித்தபோது தொண்டர்களின் உணர்வுகளுக்கு ஏற்பதான் இயக்கத்தை நடத்தி வந்தார்.


அதேபோல் ஜெயலலிதாவும், தொண்டர்களின் கருத்தை கேட்டு இயக்கத்தை நடத்தி வந்தார். அ.தி.மு.க.வில் தொண்டர்களின் உணர்வுகள், கொள்கைகளை பிரதிபலிக்கின்ற இடம் பொதுக்குழு. அந்த பொதுக்குழுவில் ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு யார் இந்த இயக்கத்தை வழிநடத்த வேண்டும் என்ற கேள்வி வந்தபோது அதில் ஏற்பட்ட சில கருத்து வேறுபாட்டினால் அ.தி.மு.க. 2, 3 அணியாக பிரிந்தது.

அதன் பிறகு மீண்டும் அ.தி.மு.க. சின்னத்தை மீட்க வேண்டும், ஜெயலலிதாவின் ஆட்சி மீண்டும் தொடர வேண்டும் என்ற நல்ல நோக்கத்தோடு அன்றைக்கு பொதுக்குழுவில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தின்படி முதல்-அமைச்சரும், துணை முதல்-அமைச்சரும் சமரசத்தின்படி இணைந்து இந்த இயக்கத்தை அவர்கள் ஒருங்கிணைப்பாளராக, இணை ஒருங்கிணைப்பாளராக இருந்து நடத்தி வருகின்றனர்.

பொதுக்குழு தீர்மானத்தின்படி தற்போது அ.தி.மு.க. இயக்கமும், ஆட்சியும் சிறப்பாக நடந்து கொண்டிருக்கிறது.

ஜெயலலிதா இந்த உலகத்தை விட்டு செல்வதற்கு முன்பு, தனக்கு பிறகு இந்த இயக்கத்தை யார் நடத்துவது? என்று அவர் யாரையும் கை காட்டிவிட்டுச் செல்லவில்லை. பல்வேறு காலக்கட்டத்தில் பல பணிகளை செய்யுமாறு உத்தரவிட்டுள்ளார். அதேபோல் எம்.ஜி.ஆரும் சரி, தனக்குப்பிறகு இவர்தான் கட்சியை வழிநடத்த வேண்டும் என்று சொல்லவில்லை. ஒட்டுமொத்த தொண்டர்களின் விருப்பத்தின் பேரிலேயே கட்சியும், ஆட்சியும் நடந்து வருகிறது.

தனக்கு பிறகு அ.தி.மு.க.வை இவர் தான் வழிநடத்த வேண்டும் என மறைந்த எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா ஆகியோர் யாரையும் சொல்லவில்லை. இது சங்கரமடம் அல்ல. இது தி.மு.க.வும் இல்லை. இது தொண்டர்களால் வழி நடத்தப்படும் இயக்கம்.

தேர்தல் தோல்வியை முழுமையாக ஏற்றுக்கொள்கிறோம். பா.ஜனதா தமிழகத்துக்கு விரோதமான திட்டங்களை செயல்படுத்தியது போன்று, தி.மு.க. உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும் 2 ஆண்டுகாலம் பரப்பி வந்தன. அந்த குற்றச்சாட்டை பா.ஜனதா சரியான முறையில் எதிர்கொள்ளவில்லை.

இந்தியா முழுவதும் பிரதமர் மோடி வெற்றி பெற்றார். தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்ட பொய் பிரசாரத்தால் பா.ஜனதா மீது ஏற்பட்ட அதிருப்தி அ.தி.மு.க.வை பாதித்தது. அதனால் தான் தோல்வி ஏற்பட்டது.

சிறுபான்மையினர் ஓட்டுகளை முழுமையாக நாங்கள் இழக்க அது ஒரு முக்கிய காரணம். அ.தி.மு.க. ஆட்சி என்றுமே சிறுபான்மையினருக்கு உறுதுணையாக இருக்கும். தி.மு.க.வை போல இரட்டை வேடம் போடும் இயக்கம் அ.தி.மு.க. இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News