செய்திகள்

தண்ணீர் பிரச்சினையை தீர்க்க முடியாத அரசு தேவைதானா?- கேஎஸ் அழகிரி

Published On 2019-06-05 02:20 GMT   |   Update On 2019-06-05 02:20 GMT
தண்ணீர் பிரச்சினையில் தமிழக அரசு பெரும் தோல்வியை சந்தித்து மக்களிடம் கெட்ட பெயர் எடுத்திருக்கிறது என்று காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.
சென்னை :

தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறுமா? என்ற பெரிய சந்தேகம் எழுந்துள்ளது. உள்ளாட்சி தேர்தல் நடத்தவேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்த பிறகும், தமிழக அரசு மெத்தனமாக செயல்படுகிறது. உள்ளாட்சி தேர்தலை தள்ளிப்போடவே அரசு நினைத்து செயல்படுகிறது.

தற்போதைய சூழ்நிலையில் தமிழகத்தில் தண்ணீர் தட்டுப்பாடு பெரிய பிரச்சினையாக உருவெடுத்து வருகிறது. குறிப்பாக தலைநகர் சென்னையில் தண்ணீர் பிரச்சினை தலைவிரித்து ஆடுகிறது. குடிக்க கூட தண்ணீர் இல்லாத நிலையில் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

தண்ணீர் பிரச்சினையை போக்க அரசு எந்தவித முன் எச்சரிக்கை நடவடிக்கையையும் எடுக்கவில்லை. மக்களின் தண்ணீர் பிரச்சினையை கூட தீர்க்க முடியாத அரசு தேவைதானா? என்னை கேட்டால், தண்ணீர் பிரச்சினையில் தமிழக அரசு பெரும் தோல்வியை சந்தித்து மக்களிடம் கெட்ட பெயர் எடுத்திருக்கிறது.



அதேபோல 12-ம் வகுப்பு பாட புத்தகத்தில் மகாகவி பாரதியின் முண்டாசு வெள்ளை நிறத்தில் இருந்து காவி நிறத்துக்கு மாறியிருக்கிறது. இது மோடி ஆட்சியின் சர்வாதிகார போக்கையும், எடப்பாடி பழனிசாமி அரசின் அடிமைத்தனத்தையும் காட்டுகிறது. இதன்மூலம் முண்டாசு கவிஞன் பாரதியை அவமரியாதை செய்திருக்கிறார்கள். இதை கண்டித்து தேசியவாதிகள் மற்றும் அரசியல் கட்சிகள் போராட்டம் நடத்தவேண்டும்.

தேர்தல் முடிவை குறிப்பிட்டு ‘நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான், கைவிடமாட்டான்’ என்று சினிமா டயலாக்கை ஓ.பன்னீர்செல்வம் பேசியிருக்கிறார். ரஜினிகாந்தின் இந்த டயலாக் சினிமாவில் எடுபட்டது. ஆனால் ஓ.பன்னீர்செல்வத்தின் இந்த சினிமா பேச்சு மக்களிடம் நிச்சயம் எடுபடாது. ஏனென்றால் கடவுள் எங்களுக்கு வேண்டியதை தந்திருக்கிறான். தவறு செய்தவர்களை தண்டித்திருக்கிறான்.

இவ்வாறு அவர் பேசினார். 
Tags:    

Similar News