செய்திகள்

விடுதலை சிறுத்தைகள் - பா.ம.க.வினர் திடீர் மோதல்

Published On 2019-04-11 13:01 GMT   |   Update On 2019-04-11 13:01 GMT
பெரம்பலூர் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சியினருக்கும் பாமகவினருக்கும் ஏற்பட்ட மோதலால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
குன்னம்:

சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியில் தி.மு.க. கூட்டணி சார்பில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் போட்டியிடுகிறார். இதையடுத்து தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

நேற்றிரவு பெரம்பலூர் அருகே உள்ள ஒகளூர் கிராமத்தில் பிரசாரம் செய்ய சென்றார். அப்போது அங்கு திரண்ட பா.ம.க.வினர், திருமாவளவன் பிரசாரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு, ஊருக்குள் வர அனுமதிக்க மாட்டோம் என்றனர்.

மேலும் அவர்கள் கூறும் போது, எங்கள் ஊரில் நாங்கள் மயான கொட்டகை அமைத்தபோது, திராவிட மணி என்பவர் எங்களுக்கும் அதில் பங்கு உண்டு என நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். உரிமை கோருபவரை சார்ந்த யாரும் ஊருக்குள் வரக்கூடாது என்றனர்.

மேலும் திருமாவளவனின் பிரசார வாகனத்தை 100-க்கும் மேற்பட்ட பா.ம.க.வினர் முற்றுகையிட்டனர். இதனால் 2 கட்சியினர் இடையேயும் மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவானது.

இதையடுத்து பெரம்பலூர் மாவட்ட எஸ்.பி. திஷாமித்தல் உத்தரவின் பேரில், டி.எஸ்.பி. தேவராஜன் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட அதிரடிப்படை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று 2 தரப்பினரிடமும் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர்.

பின்னர் போலீஸ் பாதுகாப்புடன் ஒகளூர் கிராமத்தில் திருமாவளவன் தேர்தல் பிரசாரம் செய்தார். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் பதற்றமான சூழல் நிலவுவதால் போலீசார் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். #VCK #PMK
Tags:    

Similar News