செய்திகள்

முதல்-அமைச்சர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்: சென்னை வாலிபரிடம் போலீஸ் விசாரணை

Published On 2019-03-18 05:38 GMT   |   Update On 2019-03-18 05:38 GMT
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கு தொலைபேசி மூலம் வெடிகுண்டு மிரட்டல் தொடர்பாக சென்னை வாலிபரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை:

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் வீடு சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ளது. அவரது வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் வந்தது.

இதையடுத்து அவரது வீட்டுக்கு வெடிகுண்டு நிபுணர்களும் போலீசாரும் விரைந்து சென்று அதிரடி சோதனை நடத்தினர்.

எடப்பாடி பழனிசாமி வீடு முழுவதும் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் வெடிகுண்டு கண்டுபிடிக்கும் நிபுணர்கள் சோதனை நடத்தினார்கள்.

மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டு முகாம் அலுவலகம், பாதுகாப்பு போலீசார் தங்கியிருக்கும் அறை உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் தீவிர சோதனை நடத்தப்பட்டது.

இந்த சோதனையில் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. அது வெறும் புரளி என தெரிய வந்தது.

போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்த மர்ம நபர் யார் என்று போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

அப்போது அந்த போன் அழைப்பு பள்ளிக்கரணை பகுதியில் இருந்து வந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை பள்ளிக்கரணை போலீசார் தேடி வந்தனர். அதே பகுதியைச் சேர்ந்த சுந்தர்ராஜ் என்பவர் போனில் பேசி வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தெரிய வந்தது. அவரை போலீசார் பிடித்து விசாரித்து வருகிறார்கள்.
Tags:    

Similar News