செய்திகள்

மீண்டும் பிரதமர் வேட்பாளர் மோடி என்றால் பாஜக படுதோல்வி அடையும் - நாராயணசாமி

Published On 2019-02-23 05:43 GMT   |   Update On 2019-02-23 05:43 GMT
மீண்டும் பிரதமர் வேட்பாளர் மோடி என்றால் பாஜக படுதோல்வி அடைந்து விடும் என்று புதுவை முதல்-மந்திரி நாராயணசாமி கூறியுள்ளார். #CMNarayanasamy #BJP

தூத்துக்குடி:

புதுச்சேரி முதல்-மந்திரி நாராயணசாமி திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி விமான நிலையம் வந்தார். அவரை மாவட்ட தலைவர் முரளிதரன் சால்வை அணிவித்து வரவேற்றார். பின்னர் முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பா.ஜ.க. உடனான அ.தி.மு.க. கூட்டணி என்பது ஒரு சந்தர்ப்பவாத கூட்டணி. மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது பா.ஜ.க.வால் தமிழகத்தில் காலூன்ற முடியவில்லை. பா.ஜ.க. பலமுறை அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று நினைத்தார்கள். ஆனால் ஜெயலலிதா அவர்களை தூக்கி எறிந்தார். மேலும் கடந்த பாராளுமன்ற தேர்தலில் தனித்து நின்று வெற்றி பெற்றார். ஆனால் தற்போதுள்ள அ.தி.மு.க. இப்போது பா.ஜ.க.வுடன் கூட்டணி சேர்ந்துள்ளது.

தமிழகத்தை மட்டும் அல்லாமல் புதுச்சேரியையும் மத்திய பா.ஜ.க. அரசு வஞ்சித்து வருகிறது. குறிப்பாக தமிழகத்திற்கு நீட் தேர்வு கொண்டு வந்தது, ஜல்லிக்கட்டுக்கு தடை செய்தது, மீனவர் பிரச்சனைகள் தீர்க்காதது, தமிழகத்திற்கு முறையாக கிடைக்க வேண்டிய கஜாபுயல் மற்றும் பல்வேறு திட்டங்களுக்கு கிடைக்க கூடிய நிதியை தடுத்து நிறுத்தியது. எனவே அ.தி.மு.க. அவர்களுடன் கூட்டணி சேர்ந்திருப்பது சந்தர்ப்பவாத கூட்டணி.

 


அ.தி.மு.க.வினர் மீண்டும் பிரதமர் வேட்பாளராக மோடியை கொண்டு வருவோம் என்று தெரிவிக்கின்றனர். அதை தான் நாங்களும் விரும்புகின்றோம். ஏனென்றால் அப்போதுதான் பாரதிய ஜனதா கட்சி படுதோல்வி அடையும். இதன் மூலம் அ.தி.மு.க.வும் அவர்களுடன் சேர்ந்து கடலுக்கு சென்றுவிடுவார்கள்

இவ்வாறு முதல்-மந்திரி நாராயணசாமி கூறினார்.

பேட்டியின் போது முன்னாள் எம்.பி. ராமசுப்பு, தூத்துக்குடி மாவட்ட தலைவர்கள் முரளிதரன், சீனிவாசன் உள்பட பலர் உடனிருந்தனர். #CMNarayanasamy  #BJP

Tags:    

Similar News