செய்திகள்

நாட்டின் நலன் கருதி நல்ல முடிவை எடுங்கள்- விஜயகாந்துக்கு திருநாவுக்கரசர் மறைமுக அழைப்பு

Published On 2019-02-21 07:30 GMT   |   Update On 2019-02-21 07:30 GMT
பாராளுமன்றத் தேர்தல் கூட்டணி விஷயத்தில் நாட்டின் நலன் கருதி நல்ல முடிவை எடுக்கும்படி விஜயகாந்திடம் திருநாவுக்கரசர் கூறியுள்ளார். #Thirunavukkarasar #Vijayakanth
சென்னை:

பாராளுமன்றத் தேர்தலுக்கான கூட்டணி பேச்சுவார்த்தை மற்றும் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. தமிழகத்தில் அதிமுக, பாமக, பாஜக இணைந்து வலுவான கூட்டணி அமைத்துள்ளன. திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகளை ஒதுக்கி கூட்டணி உறுதி செய்யப்பட்டுவிட்டது. அதன்பின்னர் இதர கட்சிகளையும் கூட்டணியில் சேர்க்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான திருநாவுக்கரசர் இன்று தேமுதிக தலைவர் விஜயகாந்தை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். அப்போது விஜயகாந்திடம் நலம் விசாரித்த திருநாவுக்கரசர், தமிழக அரசியல் நிலவரம் மற்றும் பாராளுமன்றத் தேர்தல் தொடர்பாக பேசியதாக கூறப்படுகிறது.



இந்த சந்திப்பு முடிந்து வெளியே வந்த திருநாவுக்கரசர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, இந்த சந்திப்பு நட்பு ரீதியானது என்றும், அமெரிக்காவில் சிகிச்சை முடிந்து திரும்பிய தனது நண்பர் விஜயகாந்தை சந்தித்து நலம் விசாரித்ததாக கூறினார்.

அரசியல் ரீதியாக பேசப்பட்டதா? என்று கேட்டதற்கு, “அவர் ஒரு கட்சியின் தலைவர், நானும் ஒரு அரசியல் தலைவர். இது தேர்தல் நேரம். இரண்டு கட்சிகளின் தலைவர்களும் சந்திக்கும்போது, அரசியல்  பேசாமல் இருக்க முடியுமா? பாராளுமன்றத் தேர்தல் மற்றும் அரசியல் நிலவரம் குறித்து இருவரும் பேசினோம். அப்போது, நாட்டின் நலன் கருதி நல்ல முடிவை எடுக்க வேண்டும் என விஜயகாந்திடம் கூறினேன்” என்றார் திருநாவுக்கரசர். #Thirunavukkarasar #Vijayakanth
Tags:    

Similar News