செய்திகள்

மதுரை தொகுதியில் பிரேமலதா போட்டியா?

Published On 2019-02-07 09:45 GMT   |   Update On 2019-02-07 09:45 GMT
பாராளுமன்ற தேர்தலில் மதுரை தொகுதியில் பிரேமலதா போட்டியிட விரும்புவதாக தே.மு.தி.க. வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகி உள்ளது. #DMDK #Vijayakanth #PremalathaVijayakanth
சென்னை:

தே.மு.தி.க. கடந்த பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா கூட்டணியில் இடம்பெற்று இருந்து. பிரதமர் மோடி பதவி ஏற்பு விழாவில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கலந்து கொண்டார்.

அதன் பிறகு கூட்டணியில் இருந்து விஜயகாந்த் ஒதுங்கினார். தற்போது பாராளுமன்ற தேர்தல் வருவதால் விஜயகாந்த் கட்சியை மீண்டும் கூட்டணியில் சேர்க்க முயற்சி நடக்கிறது.

கடந்த தேர்தலில் பா.ஜனதா கூட்டணியில் தே.மு.தி.க.வுக்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இப்போது அ.தி.மு.க.- பா.ஜனதா இடையே கூட்டணி அமைய இருப்பதால் தே.மு.தி.க.வுக்கு தனியாக தொகுதிகள் ஒதுக்க அ.தி.மு.க. தரப்பில் முன் வந்துள்ளதாக கூறப்படுகிறது.

மதுரை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நாமக்கல், கடலூர் ஆகிய 5 தொகுதிகளில் 4 தொகுதிகள் தே.மு.தி.க.வுக்கு ஒதுக்கப்படும் என்று தகவல் வெளியாகிறது.

அமெரிக்காவில் இருக்கும் விஜயகாந்த் அடுத்த வாரம் சென்னை திரும்புகிறார். அவர் வந்தவுடன் தான் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு விவரங்கள் முடிவு செய்யப்படும் என்று தே.மு.தி.க. தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

கடந்த சட்டசபை தேர்தலில் தே.மு.தி.க. கடைசி நேரத்தில் தி.மு.க. கூட்டணியில் சேர மறுத்து தனி அணியாக போட்டியிட்டது. அதன் பிறகு இந்த கூட்டணி கட்சிகள் பிரிந்து விட்டன. விஜயகாந்துடன் கூட்டணி வைத்த வைகோ, திருமாவளவன், கம்யூனிஸ்டு கட்சிகள், தி.மு.க. கூட்டணியில் இருக்கிறது. தனியாக இருக்கும் தே.மு.தி.க. இந்த முறை அ.தி.மு.க.- பா.ஜனதா கூட்டணியில் இடம் பெறுவது பற்றி ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.



பாராளுமன்ற தேர்தலில் பிரேமலதா விஜயகாந்த் வேட்பாளராக அறிவிக்க தே.மு.தி.க. திட்டமிட்டு உள்ளது. அவர் மதுரை தொகுதியில் போட்டியிடுவார் என்றும், அவருக்கு மதுரை தொகுதியை விட்டுக் கொடுக்க அ.தி.மு.க. தரப்புடன் பேச்சுவார்த்தை நடத்த தே.மு.தி.க. முடிவு செய்துள்ளது.

மதுரை விஜயகாந்துக்கு சொந்த ஊர் அங்குதான் அவர் அரசியல் கட்சியை தொடங்கினார் என்பதால் ரசிகர்கள், கட்சி தொண்டர்கள் ஆதரவுடன் மதுரையில் பிரேமலதா போட்டியிட விரும்புவதாக தே.மு.தி.க. வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகி உள்ளது. #DMDK #Vijayakanth #PremalathaVijayakanth
Tags:    

Similar News