செய்திகள்

பொங்கல் பண்டிகையையொட்டி ஊட்டியில் கரும்பு விலை உயர்வு

Published On 2019-01-14 16:03 GMT   |   Update On 2019-01-14 16:03 GMT
பொங்கல் பண்டிகையையொட்டி ஊட்டியில் கரும்பு விலை உயர்ந்து உள்ளது. ஒரு ஜோடி கரும்பு ரூ.100-க்கு விற்பனை செய்யப்படுகிறது. #sugarcane #pongalfestival
ஊட்டி:

தமிழர்களின் பண்டிகையான பொங்கல் பண்டிகை நாளை (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகையையொட்டி வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு, மஞ்சு விரட்டு சமவெளி பகுதிகளில் வெகு விமரிசையாக நடைபெறும். நீலகிரி மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. மேலும் உறியடித்தல், பொங்கல் வைத்தல், கும்மி ஆட்டம் போன்றவற்றில் பொதுமக்கள் கலந்துகொண்டு உற்சாகம் அடைவார்கள்.
 
பொங்கல் பண்டிகையில் இனிப்பான, தித்திப்பான மனதில் நீங்கா இடம் பெறுவது கரும்பு ஆகும். அதற்கு அடுத்த படியாக பொங்கல் வைக்க மண்பானைகளை பொதுமக்கள் அதிகளவில் வாங்கி பயன்படுத்துகின்றனர். நீலகிரி மாவட்டம் மலை மாவட்டம் என்பதால், இங்கு பொங்கல் பண்டிகைக்கு தேவையான கரும்பு, வாழைக்கன்று, மாலை இலை விளைவிக்கப்படுவது கிடையாது. அதன் காரணமாக அவை சமவெளிப் பகுதிகளில் இருந்து ஆண்டுதோறும் ஊட்டிக்கு லாரிகள், சரக்கு வாகனங்களில் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.

ஊட்டி நகராட்சி மார்க்கெட்டுக்கு நேற்று சமவெளி பகுதியில் இருந்து 2 லாரிகளில் கரும்புகள் கொண்டு வரப்பட்டன. பின்னர் லாரியில் இருந்து கரும்புகள் கீழே இறக்கப்பட்டு, ஊட்டி மற்றும் அதன் சுற்றுப்புற கிராமப்பகுதிகளுக்கு விற்பனைக்காக சரக்கு வாகனங்களில் அனுப்பி வைக்கப்பட்டது. ஊட்டி மார்க்கெட்டில் கரும்புகள் விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டு உள்ளது. பொங்கல் பண்டிகையையொட்டி பொதுமக்கள் கரும்புகளை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர். இதுகுறித்து வியாபாரிகள் கூறியதாவது:-

சேலம் மாவட்டம் சங்ககிரி பகுதியில் இருந்து ஊட்டிக்கு கரும்புகள் விற்பனைக்கு வந்து உள்ளன. கடந்த ஆண்டு பொங்கல் பண்டிகை மற்றும் ஆயுத பூஜையின் போது, ஒரு கரும்பு ரூ.40-க்கு விற்பனை ஆனது. தற்போது விலை உயர்ந்து ஒரு ஜோடி கரும்பு ரூ.100 முதல் ரூ.120 வரை விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கட்டு (20 கரும்புகள்) ரூ.850-க்கு விற்பனை ஆகிறது. பொங்கல் பண்டிகை நெருங்கியும் இன்னும் கரும்பு விற்பனை சூடு பிடிக்கவில்லை.

இவ்வாறு அவர்கள் கூறினர். #sugarcane #pongalfestival
Tags:    

Similar News