செய்திகள்

திருத்துறைப்பூண்டி நகராட்சி அலுவலகம் முன்பு அரசியல் கட்சியினர் காத்திருப்பு போராட்டம்

Published On 2019-01-04 17:37 GMT   |   Update On 2019-01-04 17:37 GMT
பாரபட்சமின்றி புயல் நிவாரணம் வழங்க வலியுறுத்தி திருத்துறைப்பூண்டி நகராட்சி அலுவலகம் முன்பு அரசியல் கட்சியினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருத்துறைப்பூண்டி:

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் கஜா புயலின் தாக்கத்தால் பொதுமக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர். கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு தொகை வழங்கக்கோரி பொதுமக்கள் பல்வேறு இடங்களில் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் பல்வேறு அரசியல் கட்சியின் சார்பில் திருத்துறைப்பூண்டி நகராட்சி அலுவலகம் முன்பு தொடர் காத்திருப்பு போராட்டம் நேற்று நடந்தது. போராட்டத்திற்கு தி.மு.க. நகர செயலாளர் பாண்டியன் தலைமை தாங்கினார். மாவட்ட வக்கீல் அணி தலைவர் தர்மராஜன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் சந்திரராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், காங்கிரஸ், தமிழ் மாநில காங்கிரஸ், ம.தி.மு.க., மனித நேய மக்கள் கட்சி, பா.ம.க. உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

அரசு ஓட்டு வீடு, கூரை வீடு, மாடி வீடு என பாரபட்சமின்றி அனைவருக்கும் நிவாரணத்தொகை வழங்க வேண்டும். அனைவருக்கும் அரசு வழங்கும் 27 நிவாரண பொருட்கள் வழங்க வேண்டும். நெற்பயிரை இழந்த விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் வழங்க வேண்டும். உயிரிழந்த மாடுகளுக்கு ரூ.30 ஆயிரம் வழங்க வேண்டும். ஆடுகளுக்கு ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும். ஒரு தென்னை மரத்திற்கு ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
Tags:    

Similar News