செய்திகள்

பாராளுமன்ற தேர்தலில் பிரதமரை தமிழகம் தீர்மானிக்கும் - கிறிஸ்துமஸ் விழாவில் டிடிவி தினகரன் பேச்சு

Published On 2018-12-24 05:42 GMT   |   Update On 2018-12-24 05:42 GMT
வருகிற பாராளுமன்ற தேர்தலில் இந்தியாவின் பிரதமரை தமிழகம் தீர்மானிக்கும் என்று கிறிஸ்துமஸ் விழாவில் டிடிவி தினகரன் கூறியுள்ளார். #TTVDhinakaran

நாகர்கோவில்:

அருமனை கிறிஸ்தவ இயக்கம் சார்பில் 21-வது கிறிஸ்துமஸ் விழா அருமனையில் நேற்று நடந்தது.

அம்மா மக்கள் முன்னேற்றக்கழக துணை பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் விழாவில் பங்கேற்று கிறிஸ்துமஸ் கேக் வெட்டி அனைவருக்கும் வழங்கினார். பின்னர் அவர், விழாவில் பேசியதாவது:-

அருமனை கிறிஸ்துமஸ் விழா, மத நல்லிணக்க விழாவாக நடைபெறுகிறது. இதற்கு முன்பு இங்கு நடந்த விழாவில் பங்கேற்றபோது ஆர்.கே.நகர் தொகுதியில் தேர்தல் நடந்தது. அப்போது அம்மாவின் உண்மையான தொண்டர்கள், எனக்கு ஆதரவு தருவார்கள் என்றும், இடைத்தேர்தலில் அமோக வெற்றி பெறுவேன் என்றும் விழாவில் பங்கேற்றவர்கள் தெரிவித்தனர். அது உண்மையில் நடந்தது.

இடைத்தேர்தலில் சுயேச்சையாக குக்கர் சின்னத்தில் நின்ற என்னை மக்கள் வெற்றி பெற வைத்தனர். அந்த மக்களுக்கு தேவையான உதவிகளை அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் செய்யும்.

கன்னியாகுமரி மாவட்டம் படித்தவர்கள் நிறைந்த மாவட்டம். மாற்றம் இங்கிருந்து வரவேண்டும். அதற்கு தமிழக மக்கள் முன் வர வேண்டும்.

மதங்களின் பெயரால் பிரிவினையை ஏற்படுத்துபவர்களை புறக்கணிக்க வேண்டும். வேற்றுமையில் ஒற்றுமை என்பதே இந்தியாவின் சிறப்பு. இங்கு மதசகிப்புத்தன்மை, சகோதரத்துவம் உள்ளது. இதனை துண்டாட சில சக்திகள் முயற்சிக்கின்றன. அதனை தமிழக மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். மத நல்லிணக்கத்தை பேணிகாக்க வேண்டும்.

ஆட்சி அதிகாரம் இருக்கிறது என்பதற்காக சிலர் மக்கள் விரோத செயல்களில் ஈடுபடுகிறார்கள். வருகிற புத்தாண்டில் மக்கள் அவர்களுக்கு பாடம் புகட்டுவார்கள். இந்தியாவின் பிரதமரை தமிழக மக்கள் தீர்மானிப்பார்கள்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் தேசிய கட்சிகளுக்கே ஆதரவு என்று கூறுகிறார்கள். தேசிய கட்சிகள் தமிழகத்தின் நலனில் நடுநிலையுடன் செயல்படுவதில்லை. காவிரி பிரச்சினை, முல்லை பெரியாறு பிரச்சினையில் இதனை நாம் கண் கூடாக பார்க்கிறோம். எனவே பாராளுமன்ற தேர்தலில் மக்கள் மாநில கட்சிகளுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும்.

மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி என்று அண்ணா கூறினார். அதனை செயல்படுத்தினால் தமிழகம் முன்னேறும். படித்த இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெறுவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார். #TTVDhinakaran

Tags:    

Similar News