செய்திகள்

நாகை மாவட்டத்தை தேசிய பேரிடர் பகுதியாக அறிவிக்கக்கோரி இந்திய கம்யூ. கட்சியினர் ஆர்ப்பாட்டம்

Published On 2018-12-20 17:31 GMT   |   Update On 2018-12-20 17:31 GMT
கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகை மாவட்டத்தை தேசிய பேரிடர் பகுதியாக அறிவிக்கக்கோரி நாகையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். #gajacyclone
நாகப்பட்டினம்:

நாகை தாலுகா அலுவலக நுழைவு வாயில் எதிரே இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு ஒன்றிய செயலாளர் பகு தலைமை தாங்கினார். திருமருகல் ஒன்றிய செயலாளர் ஜெயபால், நாகை நகர செயலாளர் பெரியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் முன்னாள் எம்.எல்.ஏ. மாரிமுத்து கலந்துகொண்டு பேசினார்.

கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகை மாவட்டத்தை தேசிய பேரிடர் பகுதியாக அறிவிக்க வேண்டும். புயலால் பாதிக்கப்பட்டு உயிர் இழந்த கால்நடைகளுக்கு அரசு அறிவித்த இழப்பீட்டு தொகையை உடனே வழங்க வேண்டும். புயல், கனமழையில் பாதிக்கப்பட்ட நெல் பயிர்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ. 30 ஆயிரமும், வீடுகளுக்கு ரூ. 25 ஆயிரமும் வழங்க வேண்டும்.

புயலால் பாதிக்கப்பட்ட குடிசை வீடுகள், பழைய காலனி வீடுகள் உள்ளவர்களுக்கு அரசு போர்க்கால அடிப்படையில் கான்கிரீட் வீடுகள் கட்டி தர வேண்டும். வேலை இழந்து வாழும் விவசாய தொழிலாளர்களுக்கு புயல் நிவாரண நிதியாக குடும்பம் ஒன்றுக்கு ரூ. 15 ஆயிரம் வழங்க வேண்டும். 100 நாள் வேலையை 150 நாளாக உயர்த்தி வழங்கி ரூ.224 வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் மாவட்டக்குழு உறுப்பினர்கள் ராஜேந்திரன், செந்தில்குமார், சுப்பிரமணியன், விவசாய சங்க ஒன்றிய செயலாளர் வடிவேல், விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் ஜீவாராமன், மாதர் சங்க ஒன்றியச்செயலாளர் பூங்கொடி உள்பட பலர் கலந்து கொண்டனர். #gajacyclone 
Tags:    

Similar News