செய்திகள்

தெலுங்கானாவில் சந்திரபாபு நாயுடுவுடன் காங்கிரஸ் கூட்டணி வைத்தது தவறு- இளங்கோவன்

Published On 2018-12-14 04:46 GMT   |   Update On 2018-12-14 04:46 GMT
தெலுங்கானாவில் சந்திரபாபு நாயுடுவுடன் காங்கிரஸ் கூட்டணி வைத்தது தவறு என்று இளங்கோவன் தெரிவித்துள்ளார். #Congress #Elangovan #ChandrababuNaidu
கண்ணமங்கலம்:

திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் வந்த காங்கிரஸ் முன்னாள் மாநில தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி பாரதிய ஜனதா தயவில் நடக்கிறது. வட மாநிலங்களில் தற்போது நடந்த தேர்தலில் 3 மாநிலங்களில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி அமைந்துள்ளது.

இதன் விளைவாக வரப்போகும் பாராளுமன்ற தேர்லில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ராகுல் காந்தி பிரதமர் ஆவார் என்பது உறுதி. காங்கிரஸ் வெற்றி பெற்ற மாநிலங்களில் தேர்தல் வாக்குறுதியின் படி  விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யப்படும். தெலுங்கானாவில் சந்திரபாபு நாயுடுவுடன் காங்கிரஸ் கூட்டணி வைத்தது தவறு.


தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறும் கருத்து வேடிக்கையாக உள்ளது. 3 மாநிலங்களில் ஏற்பட்ட தோல்வி பா.ஜ.க.வுக்கு மரண அடி. ஆனால் அவர் கூறுவது வெற்றிகரமான தோல்வி என விரக்தியில் பேசுகிறார். காங்கிரஸ் கட்சி, தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளுடன் சேர்ந்து வரப்போகும் தேர்தலை சந்திக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக அவர் வாலாஜாவில் நிருபர்களிடம் கூறியதாவது:-

5 மாநில சட்டமன்ற தேர்தல்களில் பா.ஜ.க.வே தோல்வியை ஒப்புக்கொண்ட போதும், பாரதிய ஜனதாவுக்கு பெரிய தோல்வி இல்லை என எடப்பாடி பழனிசாமி கூறுவது அவர் பா.ஜ.க.வின் அடிமையாகிவிட்டார் என்றுதான் கூற வேண்டும்.

தமிழக காங்கிரசில் ஏதேனும் மாற்றம் இருந்தால் அதை ராகுல்காந்தி தான் அறிவிப்பார். அ.ம.மு.க.வில் இருந்து முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி விலகி தி.மு.க.வில் இணைவதால், தி.மு.க.வின் வலிமை கூடிக் கொண்டிருக்கிறது. டி.டி.வி.தினகரன் கட்சியில் இருந்து அனைவரும் வெளியேற தயாராகி விட்டனர். நடந்து முடிந்த தேர்தல் முடிவிற்கு பின்னர் எச்.ராஜா அடக்கி வாசிப்பார் என நினைக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார். #Congress #Elangovan #ChandrababuNaidu
Tags:    

Similar News