செய்திகள்

போலி சான்றிதழ் கொடுத்து ராணுவத்தில் சேர முயற்சி 2 வாலிபர்கள் கைது

Published On 2018-12-05 10:08 GMT   |   Update On 2018-12-05 10:08 GMT
போலி சான்றிதழ் கொடுத்து ராணுவத்தில் சேர முயற்சி செய்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவை:

கோவையில் உள்ள போலீஸ் பயிற்சி மைதானத்தில் கடந்த ஆகஸ்டு மாதம் ராணுவத்திற்கு ஆள் சேர்க்கும் முகாம் நடைபெற்றது.

இதில் சேர 10-ம் வகுப்பு கல்வி தகுதி நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. இதில் கோவை மட்டுமின்றி தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வாலிபர்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு உடல் தகுதி தேர்வு, மருத்துவ சான்றிதழ் சரி பார்ப்பு நடைபெற்றது.

இதனை தொடர்ந்து கல்வி சான்றிதழ் சரி பார்க்கும் பணி நடந்தது. அப்போது தர்மபுரியை சேர்ந்த பரத், பெருமாள் ஆகியோரின் கல்வி சான்றிதழ் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் எழுந்தது.

அவர்களது சான்றிதழை சரி பார்த்தபோது போலியானது என்பது தெரிய வந்தது. வேறு சிலரின் சான்றிதழ்களை அவர்கள் போலியாக தயாரித்து கொடுத்தது கண்டு பிடிக்கப்பட்டது.

இது குறித்து ராணுவத்திற்கு ஆள் தேர்வு இயக்குனர் ரேனி கோவை ராமநாதபுரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து பரத், பெருமாள் ஆகியோரை கைது செய்தனர்.

அவர்களிடம் விசாரணை நடத்திய போது தங்களது வயது முதிர்வு அடைந்து விட்டதால் வயது குறைவானவர்களின் கல்வி சான்றிதழை கொடுத்ததாக தெரிவித்தனர். ராணுவத்தில் சேர வேண்டும் என்ற எண்ணத்தில் போலி சான்றிதழ் கொடுத்தாக தெரிவித்து உள்ளனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News