search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போலி சான்றிதழ்"

    • வெங்கடேசன் 10 மற்றும் 12-ம் வகுப்பு பி .எட். படித்துள்ளதாக கொடுத்தது போலி சான்றிதழ் என்பது தெரிய வந்தது.
    • வெங்கடேசன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை தேடினர்.

    ஏற்காடு:

    சேலம் மாவட்டம் ஏற்காட்டில் இருந்து 12 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள முளுவி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியின் தலைமை ஆசிரியராக சேலம் கோரிமேடு பர்மா காலனியை சேர்ந்த வெங்கடேசன் என்பவர் கடந்த 9 மாதங்களாக பணியாற்றி வருகிறார்.

    இந்த நிலையில் தலைமை ஆசிரியர் வெங்கடேசன் மீது வட்டார கல்வி அதிகாரி ஷேக் தாவூத் நேற்று ஏற்காடு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதில் தலைமை ஆசிரியர் வெங்கடேசன் 10-ம் வகுப்பு முதல் பி.எட். வரை படித்ததாக போலி சான்றிதழ்கள் கொடுத்து கடந்த 1997 -ம் ஆண்டு முதல் ஏற்காட்டில் பல்வேறு பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளில் பணியாற்றி வந்துள்ளார்.

    அவர் மேல் சந்தேகம் ஏற்பட்டதால் சென்னையில் உள்ள உண்மை கண்டறியும் குழுவிற்கு அவரது சான்றிதழ்களை அனுப்பி வைக்கப்பட்டது. அதில் வெங்கடேசன் 10 மற்றும் 12-ம் வகுப்பு பி .எட். படித்துள்ளதாக கொடுத்தது போலி சான்றிதழ் என்பது தெரிய வந்தது. எனவே போலி சான்றிதழ் கொடுத்து அரசு பள்ளிகளில் 27ஆண்டுகளாக பணியாற்றி வந்த அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இருந்தார்.

    இதையடுத்து வெங்கடேசன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை தேடினர். அப்போது அவர் தலைமறைவானது தெரிய வந்தது. இதையடுத்து அவரை போலீசார் தொடர்ந்து தேடி வருகிறார்கள். இதற்கிடையே போலி சான்றிதழ் கொடுத்து பணிக்கு சேர்ந்தது தொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி கபீர் விசாரணை நடத்தி வருகிறார். விசாரணை முடிவில் அவர் சஸ்பெண்டு செய்யப்படுவார் என்று தெரிவித்தனர்.

    • விசாரணை நடத்திய போலீசார் மோசடியில் ஈடுபட்ட 6 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து, கணேஷ் குமாரை கைது செய்தனர்.
    • நிலத்திற்கு சொந்தக்காரர் வெளிமாநிலத்தில் இருப்பதை தங்களுக்கு சாதகமாக்கிக் கொண்டு மோசடி நடந்துள்ளது.

    ராஜபாளையம்:

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சிவகாமிபுரம் தெருவைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 56). இவர் தொழில் நிமித்தமாக ராஜஸ்தான் மாநிலம் ஆழ்வார் மாவட்டம் திவாடி என்ற ஊரில் தனது மனைவியுடன் வசித்து வருகிறார்.

    இவர் கடந்த 5.6.2022 அன்று ராஜபாளையத்தை அடுத்த கீழராஜகுலராமன் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட அரசியார்பட்டி கிராமத்தில் பெருமாள்சாமி என்பவருக்கு சொந்தமான 9.64 சென்ட் நிலத்தை விலைக்கு வாங்கினார். பின்னர் அந்த இடத்தை தான் மற்றும் தனது மனைவி பெயரில் பதிவு செய்து பத்திரமும் வாங்கினார்.

    இதற்கிடையே அதே ஊரைச்சேர்ந்த ராஜேந்திரனின் நண்பரான முத்துகிருஷ்ணன் என்பவர் கடந்த 10.1.2023 அன்று ஒரு வாட்ஸ்அப் தகவலை ராஜேந்திரனுக்கு அனுப்பினார். அதில் உங்களுக்கு சொந்தமான 9.64 சென்ட் நிலம் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்து இருந்தார்.

    இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த ராஜேந்திரன் உடனடியாக தனது மனைவியை அழைத்துக்கொண்டு ராஜஸ்தானில் இருந்து ராஜபாளையம் வந்தார். பின்னர் அவர் தனது பெரியப்பா வீட்டில் வைத்து இது சம்பந்தமாக ஆலோசனை நடத்தினார். மேலும் இந்த மோசடி குறித்து மேலோட்டமாக விசாரித்தபோது பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியானது.

    அதாவது, ராஜேந்திரனும், அவரது மனைவியும் இறந்து விட்டதாக போலியாக இறப்பு சான்றிதழ் தயாரித்து, அவர்களது வாரிசாக சொக்கநாதன்புத்தூரை சேர்ந்த கணேஷ்குமார் என்பவரை நியமித்து அவரது பெயருக்கு இந்த நிலத்தை மாற்றி பத்திரம் தயாரிக்கப்பட்டுள்ளது.

    இதற்கு பத்திர எழுத்தர் சுகுணா, கோவையை சேர்ந்த குமார், செட்டியார்பட்டியைச் சேர்ந்த நாராயணன் மகன் முத்துகிருஷ்ணன், இந்த பட்டாவை மாற்றி நில மோசடிக்கு சாட்சி கையெழுத்திட்ட கீழராஜகுலராமன் கிராமத்தைச் சேர்ந்த முருகன், முருகேசன் மற்றும் போலியான இறப்பு சான்றிதழ் தயாரித்து நிலத்தை அபகரிக்க மகனாக நடித்த கணேஷ்குமார் ஆகிய 6 பேர் மீதும் நிலத்தை பறிகொடுத்த ராஜேந்திரன் கீழராஜகுலராமன் போலீசில் புகார் அளித்தார்.

    அதன்பேரில் விசாரணை நடத்திய இன்ஸ்பெக்டர் ரமேஷ்கண்ணன், சப்-இன்ஸ்பெக்டர் லதா ஆகியோர் மோசடியில் ஈடுபட்ட 6 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து, கணேஷ் குமாரை கைது செய்தனர். தலைமறைவான மற்றவர்களை தீவிரமாக தேடி வருகிறார்கள். நிலத்திற்கு சொந்தக்காரர் வெளி மாநிலத்தில் இருப்பதை தங்களுக்கு சாதகமாக்கிக் கொண்டு இந்த மோசடி நடந்துள்ளது.

    பல லட்சம் மதிப்புள்ள நிலத்தை அபகரிக்க உயிருடன் இருப்பவர்களை இறந்து விட்டதாக போலியான சான்றிதழ் தயாரித்து, அவர்களுக்கு வாரிசாக ஒருவரை நியமித்து மோசடியில் ஈடுபட்ட சம்பவம் ராஜபாளையம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • ஆசிரியையின் கல்வி அலுவலகத்தில் அவரது சான்றிதழ்களை தற்போது சரிபார்த்தனர். அப்போது அவர் 12ம் வகுப்பு சான்றிதழ் போலியாக கொடுத்தது தெரிய வந்தது.
    • போலி சான்றிதழ் கொடுத்து ஆசிரியை பணியில் சேர்ந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    வருசநாடு:

    தேனி மாவட்டம் கண்டமனூர் ராஜேந்திரா நகர் பகுதியில் அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. இங்கு கடந்த 1999-ம் ஆண்டு விஜயபானு (வயது 47) என்பவர் இடை நிலை ஆசிரியராக பணியில் சேர்ந்தார்.

    இந்த நிலையில் மாவட்ட கல்வி அலுவலகத்தில் அவரது சான்றிதழ்களை தற்போது சரிபார்த்தனர். அப்போது அவர் 12ம் வகுப்பு சான்றிதழ் போலியாக கொடுத்தது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து மாவட்ட கல்வி அலுவலர் கலாவதி தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் இது குறித்து புகார் அளித்தார்.

    எஸ்.பி. உத்தரவின் பேரில் கண்டமனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து ஆசிரியை விஜயபானுவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். போலி சான்றிதழ் கொடுத்து ஆசிரியை பணியில் சேர்ந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • தாசில்தார் உள்ளிட்ட 13 பேர் மீது வழக்கு பதிவு
    • நீதிபதி உத்தரவு

    ஆலங்காயம்:

    திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்துள்ள பெரிய குடும்ப தெரு பகுதியை சேர்ந்தவர் பவானி சங்கர் இவரது மனைவி கமலா 57 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆகியுள்ளது.

    இவர்களுக்கு குழந்தை இல்லாததால் பவானி சங்கர் முதல் மனைவிக்கு தெரியாமல் அதே பகுதியை சேர்ந்த இந்திராணி என்வருடன் தொடர்பு வைத்தார்.

    அவர்களுக்கு பாலாஜி பேபி என்ற இரு பிள்ளைகள் உள்ளனர். இந்த நிலையில் பவானி சங்கர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு உடல் நலகுறைவால் இறந்துவிட்டார்.

    பவானிசங்கருக்கு இந்திராணி மற்றும் அவருடைய மகன் பாலாஜி இருவர் மட்டுமே வாரிசு என்று வருவாய் துறையிடம் பொய்யான வாரிசு சான்றிதழ் தயார் செய்து கமலாவின் கணவர் பவானி சங்கர் பேரில் இருந்த 2 ஏக்கர் 35 சென்ட் நிலத்தை இந்திராணி மற்றும் பாலாஜி ஆகியோரின் பெயருக்கு வாணியம்பாடி சார் பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்து பட்டா ,சிட்டா ஆகியவற்றை பெற்று கொண்டனர்.

    இதற்கு ஆலங்காயம் புலவர்பள்ளி பகுதியை சேர்ந்த ராம்கி,விஜிலாபுரம் பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் ஆகியோர் சாட்சிகளாக கையெழுத்து போட்டுள்ளனர்.

    இது குறித்து பத்திரபதிவு தடை செய்ய வேண்டும் என்று கமலா தடை மனுவை சார்பதிவாளர் அலுவல கத்தில் அளித்துள்ளார். இதை சார்பதிவாளர் கார்த்திகேயன் ஏற்க மறுத்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் பொய்யான வாரிசு சான்றிதழ் பெற்று நிலத்தை பத்திர பதிவு செய்த மற்றும் அதற்கு உடந்தையாக இருந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாணியம்பாடி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

    இந்த வழக்கில் விசாரணை நடத்திய குற்றவியல் நீதித்துறை நடுவர் போலியாக வாரிசு சான்றிதழ் பெற்று நிலத்தை பத்திரப்பதிவு செய்த இந்திராணி, இந்திராணியின் மகன் பாலாஜி, வாரிசு சான்றிதழ் வழங்கும் போது பணியில் இருந்த தாசில்தார் கீதாராணி,துணை தாசில்தார் ஓய்வு பெற்ற ரகுராம கிருஷ்ணன், பத்திர பதிவு செய்த சார்பதிவாளர் கார்த்திகேயன்,பொய்யான வாரிசு சான்றிதழ் பெற உதவியாக இருந்த மற்றும் சாட்சி கையெழுத்து போட்ட நபர்கள் என 13 பேர் மீது வழக்கு பதிவு செய்ய நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

    அதன் பேரில் 13 பேர் மீது வாணியம்பாடி டவுன் போலீஸ் நிலையத்தில் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.

    • எர்ணாகுளம் மகாராஜாஸ் கல்லூரியில் பணி செய்ததாக போலி அனுபவ சான்றிதழை வித்யா சமர்ப்பித்ததாக தெரிகிறது.
    • வித்யா அளித்துள்ள ஜாமீன் மனு மீதான விசாரணை நாளை நடக்கிறது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் காசர்கோட்டை சேர்ந்தவர் வித்யா (வயது26). இவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஆதரவு அமைப்பான எஸ்.எப்.ஐ. அமைப்பின் முன்னாள் நிர்வாகி ஆகும். தற்போது காலடி சம்ஸ்கிருத பல்கலைக்கழகத்தில் பி.எச்டி. படித்து வருகிறார்.

    இந்த நிலையில் வித்யா சமீபத்தில் பாலக்காடு அட்டப்பாடி ராஜீவ் காந்தி நினைவு கலை அறிவியல் கல்லூரியில் விரிவுரையாளர் பணிக்கு நடைபெற்ற நேர்முக தேர்வில் கலந்து கொண்டார். அப்போது எர்ணாகுளம் மகாராஜாஸ் கல்லூரியில் பணி செய்ததாக போலி அனுபவ சான்றிதழை வித்யா சமர்ப்பித்ததாக தெரிகிறது. இதுதொடர்பான புகாரின் அடிப்படையில் எர்ணாகுளம் மத்திய போலீசார் கடந்த 6-ந் தேதி வித்யா மீது வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் இந்த வழக்கு பாலக்காடு அகழி போலீசுக்கு மாற்றப்பட்டது.

    இதைதொடர்ந்து வித்யாவை போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் கோழிக்கோடு மேப்பயூர் அருகே தோழி வீட்டில் பதுங்கி இருந்த வித்யாவை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து மருத்துவ பரிசோதனை செய்து இரவு 12.30 மணிக்கு அகழி போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வந்தனர். அவர் நேற்று மண்ணார்காடு மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். மேலும் 2 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கவும் கோர்ட்டு அனுமதி அளித்து உள்ளது. இதனிடையே வித்யா அளித்துள்ள ஜாமீன் மனு மீதான விசாரணை நாளை (சனிக்கிழமை) நடக்கிறது.

    • போலி சான்றிதழ் குறித்து மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு புகார்கள் வந்தன.
    • தலைமறைவாக உள்ள டெல்லியை சேர்ந்த ஷிவானியை போலீசார் தேடி வருகின்றனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், சார்மினார், சந்திராயண குட்டா பகுதியை சேர்ந்தவர் முகமது கலிமுதீன் (வயது 45). இவரது நண்பர்கள் டெல்லியை சேர்ந்த ஷிவானி, அப்பர் பள்ளி முகமது பெரோஸ் ( 44) சார்வான் மாருதி நகரை சேர்ந்த அப்துல் பாசித் அலி ஆகியோர் கூட்டாக சேர்ந்து ஆந்திராவில் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரி சான்றிதழ்களை போலியாக தயார் செய்துள்ளனர்.

    தயாரிக்கப்பட்ட போலி சான்றிதழ்களை லட்சக்கணக்கில் விற்பனை செய்துள்ளனர். போலி சான்றிதழ் குறித்து மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு புகார்கள் வந்தன.

    போலீசார் போலி சான்றிதழ் தயாரித்து விற்பனை செய்து வருபவர்கள் குறித்து விசாரணை செய்து வந்தனர். விசாரணையில் முகமது கலிமுத்தீன், ஷிவானி முகமது பிரோஸ், அப்துல் பாசித் அலி ஆகியோர் போலி சான்றிதழ் தயாரித்து விற்பனை செய்தது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் அவர்கள் 3 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கம்ப்யூட்டர் பிரிண்டர் ஹார்ட் டிஸ்க் 3 செல்போன் உள்ளிட்ட ஏராளமான எலெக்ட்ரானிக் பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள டெல்லியை சேர்ந்த ஷிவானியை தேடி வருகின்றனர்.

    • தமிழ்நாடு இடைநிலைக்கல்வி வாரியம் வழங்க வேண்டிய சான்றிதழை சகாயசுந்தரி போலியாக தயாரித்து அதனை சமர்ப்பித்து பணியில் சேர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.
    • ஆசிரியை சகாயசுந்தரி மீது மோசடி உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருச்சி:

    திருச்சி மாவட்டம் துறையூர் அருகேயுள்ள மதுராபுரி மூன்றாவது தெருவைச் சேர்ந்தவர் சிங்கராயர் மனைவி சகாயசுந்தரி (வயது 49). இவர் தற்போது மண்ணச்சநல்லூரை அடுத்த மூவராயன்பாளையம் பஞ்சாயத்து யூனியன் தொடக்கப்பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார். முன்னதாக கடந்த 1997-ம் ஆண்டு பஞ்சாயத்து நடுநிலைப்பள்ளியில் பணியில் சேர்ந்தார்.

    இந்தநிலையில் ஆசிரியர்களின் உண்மைத்தன்மையை அறியும் பொருட்டு அவர்களின் கல்வி சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு வருகிறது. இதற்கான ஆய்வு பணிகளில் மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் ஈடுபட்டுள்ளார். அப்போது ஆசிரியை சகாயசுந்தரி பணியில் சேரும் போது வழங்கிய சான்றிதழ் போலியானது என்பது தெரிந்தது. தமிழ்நாடு இடைநிலைக்கல்வி வாரியம் வழங்க வேண்டிய சான்றிதழை சகாயசுந்தரி போலியாக தயாரித்து அதனை சமர்ப்பித்து பணியில் சேர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.

    இதையடுத்து அவர் ஏமாற்றி பணியில் சேர்ந்தது உறுதியானது. இதுதொடர்பாக முசிறி கல்வி மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் ஜோதிமணி, திருச்சி மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார்.

    அதன்பேரில் ஆசிரியை சகாயசுந்தரி மீது மோசடி உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். ஆசிரியை சகாயசுந்தரி பணியில் சேர்ந்து 26 ஆண்டுகளுக்கு பிறகு அவர் போலி சான்றிதழ் கொடுத்தது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

    • சிபிஐ அதிகாரிகள் விசாரணையில் வெளிநாடுகளில் எம்.பி.பி.எஸ். படித்தவர்கள் ஆந்திரா, தெலுங்கானா, பீகார் மருத்துவ கவுன்சிலில் போலி சான்றிதழ்களை பதிவு செய்யப்பட்டது தெரியவந்தது.
    • ஆந்திரா, தெலுங்கானாவை சேர்ந்த 73 பேர் போலி டாக்டர்களாக செயல்பட்டு வந்து உள்ளனர்.

    திருப்பதி:

    வெளிநாடுகளில் எம்.பி.பி.எஸ் படித்த மாணவர்கள் இந்தியாவில் மருத்துவ தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாமலேயே தேர்ச்சி பெற்றதாக போலி சான்றிதழ் தயாரித்து மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பல்வேறு புகார்கள் எழுந்தன.

    ஆந்திராவில் இருந்து தெலுங்கானா பிரிவதற்கு முன்பு இது போன்று ஏராளமானோர் போலி சான்றிதழ்கள் பதிவு செய்யப்பட்டது தெரியவந்தது.

    இதுகுறித்து சி.பி.ஐ அதிகாரிகள் ஆந்திராவில் உள்ள மருத்துவ கவுன்சில் அலுவலகத்தில் நேற்று சோதனையில் ஈடுபட்டனர்.

    சிபிஐ அதிகாரிகளின் சோதனையில் கடந்த 2014 முதல் 2018-ம் ஆண்டு வரை சீனா, ரஷியா, உக்ரைன் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் எம்.பி.பி.எஸ். படித்த மாணவர்கள் இந்தியாவில் தகுதித் தேர்வில் தோல்வி அடைந்தனர்.

    இருப்பினும் அவர்கள் போலி சான்றிதழ்களை தயாரித்து ஆந்திரா மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்து டாக்டர்களாக பணியாற்றி வருவது கண்டுபிடிக்கப்பட்டது.

    போலி சான்றிதழ் பதிவு செய்வதற்கு மருத்துவ கவுன்சில் அதிகாரிகளும் உடந்தையாக இருந்தது தெரியவந்துள்ளது.

    இது குறித்து மருத்துவ கவுன்சில் அதிகாரிகளின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை செய்தபோது எப்.எம்.ஜி. தேர்வுக்கான போலி சான்றிதழ்கள் மற்றும் 15 முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர்.

    மேலும் சிபிஐ அதிகாரிகள் விசாரணையில் வெளிநாடுகளில் எம்.பி.பி.எஸ். படித்தவர்கள் ஆந்திரா, தெலுங்கானா, பீகார் மருத்துவ கவுன்சிலில் போலி சான்றிதழ்களை பதிவு செய்யப்பட்டது தெரியவந்தது. இதில் ஆந்திரா, தெலுங்கானாவை சேர்ந்த 73 பேர் போலி டாக்டர்களாக செயல்பட்டு வந்து உள்ளனர்.

    இதேபோல் பீகார் மருத்துவ கவுன்சிலிலும் போலி சான்றிதழ் கொடுத்து பதிவு செய்து டாக்டர்களாக பணியாற்றி வருகின்றனர்.

    இதில் ஆந்திரா, தெலுங்கானாவை சேர்ந்த 7 டாக்டர்களை பிடித்து சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்கள் மீது குற்றம், சதி செய்தல், மோசடி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர்.

    மேலும் போலி சான்றிதழ் கொடுத்த பட்டியலில் உள்ளவர்களிடம் விசாரணை நடத்த உள்ளனர்.

    • அரசுக்கு சொந்தமான இடத்தில் ஒருவர் வீடு கட்டி மின் இணைப்பு பெற்றுள்ளார்.
    • சான்றிதழ் தயாரித்து மின் இணைப்பு பெற்றது தெரியவந்தது.

    விழுப்புரம்:

    மரக்காணம் அடுத்த கூனிமேடு பகுதியில் அரசுக்கு சொந்தமான இடத்தில் ஒருவர் வீடு கட்டி மின் இணைப்பு பெற்றுள்ளார். இது தொடர்பாக கூனிமேடு கிராம நிர்வாக அலுவலர் நடத்திய விசாரணையில், போலியாக ரப்பர் ஸ்டாம்ப் சீல் செய்து, சான்றிதழ் தயாரித்து மின் இணைப்பு பெற்றது தெரியவந்தது. இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் அப்துல்ரகீம் மரக்காணம் போலீஸ் நிலையத்தில் புகாரளித்தார்.

    அதன் பேரில் மரக்காணம் சப்-இன்ஸ்பெக்டர் தீபன் தலைமையிலான போலீசார் கூனிமேடு, செட்டிக்குப்பம் பகுதியை சேர்ந்த 3 நபர்களை பிடித்து விசாரித்து வருகின்றனர். மேலும், இது தொடர்பாக புதுச்சேரியில் தலைமறைவாகியுள்ள 2 பேரையும் போலீ சார் தீவிரமாக தேடி வரு கின்றனர். இச்சம்பவத்தால் மரக்காணம் பகுதி பர பரப்பாக காணப்படுகிறது. 

    • பதவி உயர்வு பெற்று திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகத்தில் கண்காணிப்பாளராக பணியில் சேர்ந்தார்.
    • குற்றப்பிரிவு போலீசார் பத்மநாபன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திண்டுக்கல்:

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் மாதாநகரைச் சேர்ந்தவர் பத்மநாபன் (வயது 60). இவர் 1985ம் ஆண்டு குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகத்தில் அலுவலக உதவியாளராக சேர்ந்தார். அதன் பின்னர் பதவி உயர்வு பெற்று திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகத்தில் கண்காணிப்பாளராக பணியில் சேர்ந்தார்.

    கடந்த செப்டம்பர் மாதம் 28-ந் தேதி ஓய்வு பெற்றார். அப்போது பணி ஓய்வுக்கான பணப்பலன்கள் அளிக்க சான்றிதழ், பதவி உயர்வு உள்ளிட்ட ஆவணங்களை அதிகாரிகள் சரிபார்த்தனர். அப்போது பத்மநாபன் தனது பதவி உயர்வுக்காக அளித்த 10ம் வகுப்பு கல்விச்சான்றிதழ் போலி என தெரிய வந்தது.

    இதனைத் தொடர்ந்து அவரது பணி ஓய்வை நிறுத்தி வட்டார குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் செல்வராணி, திண்டுக்கல் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். இதனைத் தொடர்ந்து குற்றப்பிரிவு போலீசார் பத்மநாபன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கடந்த 2011 முதல் 2015 வரை போக்குவரத்து துறையில் டிரைவர், கண்டக்டர், உதவி பொறியாளர் உள்ளிட்ட பணிகளுக்கு அதிகமாக ஆட்கள் எடுக்கப்பட்டன.
    • சிலர் போலி சான்றிதழ் கொடுத்து வேலைக்கு சேர்ந்து மோசடி செய்ததாக புகார் எழுந்தது.

    சென்னை:

    அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் கடந்த 2011 முதல் 2015 வரை போக்குவரத்து துறையில் டிரைவர், கண்டக்டர், உதவி பொறியாளர் உள்ளிட்ட பணிகளுக்கு அதிகமாக ஆட்கள் எடுக்கப்பட்டன. அப்போது சிலர் போலி சான்றிதழ் கொடுத்து வேலைக்கு சேர்ந்து மோசடி செய்ததாக புகார் எழுந்தது.

    இதுதொடர்பாக அமலாக்க இயக்குனரகத்தின் வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் அந்த காலக்கட்டத்தில் போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்தவர்கள் தொடர்பாக தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் ஆவணங்கள் பெறப்பட்டன.

    அதன்படி 12 பேர் போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்தது தெரிய வந்தது. இவர்களில் 8 பேர் டிரைவர்கள், 2 பேர் உதவி பொறியாளர்கள், மேலும் கண்டக்டர்கள் உள்பட 2 பேரும் இதில் அடங்குவர்.

    இதையடுத்து அவர்கள் 12 பேரும் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகர போக்குவரத்து கழகம் தெரிவித்து உள்ளது.

    ×