search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    கல்லூரி விரிவுரையாளர் பணிக்கு போலி சான்றிதழ் கொடுத்த பெண் கைது
    X

    கல்லூரி விரிவுரையாளர் பணிக்கு போலி சான்றிதழ் கொடுத்த பெண் கைது

    • எர்ணாகுளம் மகாராஜாஸ் கல்லூரியில் பணி செய்ததாக போலி அனுபவ சான்றிதழை வித்யா சமர்ப்பித்ததாக தெரிகிறது.
    • வித்யா அளித்துள்ள ஜாமீன் மனு மீதான விசாரணை நாளை நடக்கிறது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் காசர்கோட்டை சேர்ந்தவர் வித்யா (வயது26). இவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஆதரவு அமைப்பான எஸ்.எப்.ஐ. அமைப்பின் முன்னாள் நிர்வாகி ஆகும். தற்போது காலடி சம்ஸ்கிருத பல்கலைக்கழகத்தில் பி.எச்டி. படித்து வருகிறார்.

    இந்த நிலையில் வித்யா சமீபத்தில் பாலக்காடு அட்டப்பாடி ராஜீவ் காந்தி நினைவு கலை அறிவியல் கல்லூரியில் விரிவுரையாளர் பணிக்கு நடைபெற்ற நேர்முக தேர்வில் கலந்து கொண்டார். அப்போது எர்ணாகுளம் மகாராஜாஸ் கல்லூரியில் பணி செய்ததாக போலி அனுபவ சான்றிதழை வித்யா சமர்ப்பித்ததாக தெரிகிறது. இதுதொடர்பான புகாரின் அடிப்படையில் எர்ணாகுளம் மத்திய போலீசார் கடந்த 6-ந் தேதி வித்யா மீது வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் இந்த வழக்கு பாலக்காடு அகழி போலீசுக்கு மாற்றப்பட்டது.

    இதைதொடர்ந்து வித்யாவை போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் கோழிக்கோடு மேப்பயூர் அருகே தோழி வீட்டில் பதுங்கி இருந்த வித்யாவை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து மருத்துவ பரிசோதனை செய்து இரவு 12.30 மணிக்கு அகழி போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வந்தனர். அவர் நேற்று மண்ணார்காடு மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். மேலும் 2 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கவும் கோர்ட்டு அனுமதி அளித்து உள்ளது. இதனிடையே வித்யா அளித்துள்ள ஜாமீன் மனு மீதான விசாரணை நாளை (சனிக்கிழமை) நடக்கிறது.

    Next Story
    ×