செய்திகள்

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரி அரசு ஊழியர்- ஆசிரியர்கள் நாளை வேலை நிறுத்தம்

Published On 2018-12-03 07:04 GMT   |   Update On 2018-12-03 07:04 GMT
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரி அரசு ஊழியர், ஆசிரியர்கள் நாளை முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர். இதில் சுமார் 7 லட்சம் பேர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. #JactoGeo
சென்னை:

தமிழகத்தில் கடந்த 2003-ம் ஆண்டுக்கு பிறகு அரசு பணியில் சேர்ந்தவர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டம் அறிவிக்கப்பட்டது.

புதிய ஓய்வூதிய திட்டத்தால் ஏராளமான சலுகைகள் பறி போய் விட்டதாக அரசு ஊழியர்கள்- ஆசிரியர்கள் அதிருப்தி தெரிவித்தனர். எனவே பாதிப்பை ஏற்படுத்தும் புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தைத் தொடர வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்கள்.

அதுபோல இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்குதல், ஊழியர்களின் ஊதிய முரண்பாடுகளை களைதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி அரசு ஊழியர்கள்- ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் வலியுறுத்திய படி உள்ளனர்.

இதை நிறைவேற்றக் கோரி ஏற்கனவே ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் பல தடவை வேலைநிறுத்தம் செய்துள்ளனர். இந்த நிலையில் டிசம்பர் 4-ந்தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக அறிவித்து இருந்தனர்.

கடந்த 30-ந்தேதி ஜாக்டோ-ஜியோ அமைப்பினருடன் அரசு பேச்சுவார்த்தை நடத்தியது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் போராட்ட அறிவிப்பை கைவிட கேட்டுக்கொண்டார்.

ஆனால் அரசின் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதனால் நாளை முதல் ஜாக்டோ- ஜியோ வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்க உள்ளது.


நாளை முதல் ஒவ்வொரு நாளும் பல்வேறு போராட்டங்களில் அரசு ஊழியர்கள்- ஆசிரியர்கள் ஈடுபடுகின்றனர். இதுகுறித்து ஜாக்டோ - ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் மு.அன்பரசு ‘மாலைமலர்’ நிருபரிடம் கூறியதாவது:-

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி நாங்கள் பலமுறை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி விட்டோம். ஆனால் காலம்தான் கடந்ததே தவிர எங்கள் கோரிக்கைகள் நிறைவேறவில்லை.

இதனால்தான் வேலைநிறுத்த போராட்டத்தில் நாளை முதல் இறங்குகிறோம்.

ஜாக்டோ - ஜியோ அமைப்பில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை உள்ளிட்ட பல்வேறு அரசு துறை ஊழியர்கள் உள்ளனர். மொத்தம் 178 அமைப்புகள் இதில் உள்ளன. எங்களது போராட்டத்துக்கு மேலும் பல சங்கங்களின் ஆதரவு கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம்.

ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டாலும் கஜா புயலால் பாதிக்கப்பட்ட இடங்களில் பணியாற்றும் ஊழியர்கள் தொடர்ந்து புயல் நிவாரண பணிகளில் ஈடுபடுவார்கள்.

அதுமட்டுமல்ல, வெளி மாவட்டங்களில் இருந்து டெல்டா மாவட்டங்களுக்கு சென்று நிவாரண பணியில் ஈடுபடும் ஊழியர்களும் தொடர்ந்து சென்று மக்களுக்கு உதவும் பணியில் ஈடுபடுவார்கள்.

ஸ்டிரைக்கில் ஈடுபடும் மற்ற அரசு ஊழியர்கள் வட்டார- ஒன்றிய அளவில் நாளை மதியம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவார்கள். நாளை மறுநாள் (5-ந்தேதி) தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடக்கிறது.

6-ந்தேதி மாவட்ட அளவில் ஒருங்கிணைப்பு கமிட்டி கூட்டங்கள் கூட்டி முடிவு எடுக்கிறார்கள்.

7-ந்தேதி கலெக்டர் அலுவலகம் முன்பு மறியல் போராட்டம் நடைபெறுகிறது. 8-ந்தேதி போராட்டத்தை தீவிரப்படுத்த எழுச்சி கூட்டங்கள் நடத்தி அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுக்க உள்ளனர்.

எங்களது போராட்டத்தில் 7 லட்சம் பேர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஜாக்டோ - ஜியோ போராட்டத்தில் பல்வேறு அரசு துறை ஊழியர்கள், ஆசிரியர்கள் பங்கேற்க உள்ளதால் நாளை முதல் தொடக்கப் பள்ளிகள் மற்றும் அரசு அலுவலகங்களில் பணிகள் பெருமளவு பாதிக்கும் நிலை ஏற்படும். #JactoGeo
Tags:    

Similar News