செய்திகள்

கமுதியில் ஜவுளி வியாபாரி வெட்டிக் கொலை

Published On 2018-11-25 12:22 GMT   |   Update On 2018-11-25 12:22 GMT
கமுதியில் வீடு புகுந்து ஜவுளி வியாபாரியை வெட்டிக்கொன்ற மர்ம கும்பலை போலீசார் தேடி வருகிறார்கள்.

கமுதி:

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள ராமசாமிபட்டியைச் சேர்ந்தவர் ஜெயராமன் (வயது37). இவரது மனைவி பொன்னாத்தாள். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

ஜெயராமன் மொபட்டில் ஊர் ஊராக சென்று ஜவுளி வியாபாரம் செய்து வந்தார். 6 மாதத்துக்கு முன்பு கமுதி செட்டியார் பஜாரில் வாடகைக்கு கடை எடுத்து ஜவுளி விற்பனையை தொடங்கினார். அதே பகுதியில் குடும்பத்துடன் தங்கி இருந்தார்.

வியாபாரம் முடிந்ததும் ஜெயராமன் நேற்று இரவு வீடு திரும்பினார். குடும்பத்தினருடன் அமர்ந்து சாப்பிட்டார். பின்னர் அவர் கீழ்தளத்தில் தூங்கினார். பொன்னாத்தாளும், குழந்தைகளும் மாடியில் தூங்கினர்.

இந்த நிலையில் இன்று அதிகாலை வீட்டின் கதவு தட்டப்படும் சத்தம் கேட்டது. திடுக்கிட்டு எழுந்த ஜெயராமன் கதவை திறந்தார். அப்போது திபுதிபுவென புகுந்த மர்ம கும்பல் ஜெயராமனை சரமாரியாக அரிவாளால் வெட்டி விட்டு தப்பியது.

கணவரின் அலறல் சத்தம் கேட்டு பொன்னாத்தாள் வந்து பார்த்தபோது ஜெயராமன் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார்.

ஜெயராமன் படுகொலை செய்யப்பட்டது குறித்து கமுதி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸ் துணை சூப்பிரண்டு சண்முகசுந்தரம் உத்தரவின்பேரில் போலீசார் விரைந்து வந்து விசாரித்தனர்.

பின்னர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கமுதி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

ஜெயராமன் கொலை செய்யப்பட்டதற்கான காரணம் என்ன என்று தெரியவில்லை. ஜெயராமன் கொலை செய்யப்பட்டதில் அவரது மனைவிக்கு தொடர்பு இருக்குமோ? என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

எனவே பொன்னாத்தாளை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரித்து வருகிறார்கள்.

Tags:    

Similar News