செய்திகள்
புயலால் பாதிக்கப்பட்ட காரைக்கால் பட்டினச்சேரி கடற்கரை பகுதியை கவர்னர் கிரண்பேடி ஆய்வு செய்தார்.

காரைக்கால் மாவட்டத்தில் கவர்னர் கிரண்பேடி இன்று ஆய்வு

Published On 2018-11-24 07:47 GMT   |   Update On 2018-11-24 07:47 GMT
கஜா புயலால் பாதிக்கப்பட்ட காரைக்கால் மாவட்டத்தில் கவர்னர் கிரண்பேடி இன்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். #GajaCyclone #Kiranbedi
காரைக்கால்:

கஜா புயல் கடந்த 16-ந்தேதி அதிகாலை கரையை கடந்தது. அப்போது காரைக்கால் மாவட்டத்தில் பலத்த சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது. இதில் ஏராளமான வீடுகள், மீனவர்களின் படகுகள் பலத்த சேதம் அடைந்தன. மரங்கள், மின் கம்பங்கள் சாய்ந்து விழுந்தன. பொது மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதையடுத்து காரைக்கால் மாவட்டத்தில் புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி, சபாநாயகர் வைத்திலிங்கம் மற்றும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் பார்வையிட்டு பொது மக்களுக்கு ஆறுதல் கூறினர். ஆனால் புதுவை கவர்னர் கிரண்பேடி காரைக்கால் சென்று புயல் பாதித்த இடங்களை பார்வையிடவில்லை. இதனால் அவருக்கு பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்புகள் வந்தன.

இந்த நிலையில் புயல் பாதித்த இடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்வதற்காக கவர்னர் கிரண்பேடி இன்று காலை புதுவையில் இருந்து காரைக்கால் வந்தார். அவரை கலெக்டர் கேசவன் வரவேற்றார். பின்னர் கவர்னர் கிரண்பேடி காரைக்கால் அரசலாற்றுக்கு சென்றார். அங்கு புயலால் சேதமடைந்த படகுகளை ஆய்வு செய்தார்.

இதையடுத்து திருமலை ராயன்பட்டினம், பட்டினச்சேரி பகுதியில் உள்ள மீனவ கிராமங்களுக்கு சென்றார். அப்போது அங்கு மழை பெய்து கொண்டிருந்தது. இதையடுத்து அவர் குடை பிடித்தபடி புயலால் பாதிக்கப்பட்ட வீடுகள் மற்றும் படகுகளை பார்வையிட்டு, பொதுமக்களுக்கு ஆறுதல் கூறினார். மீனவர்கள், பொது மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். பட்டினச்சேரியில் உள்ள கடற்கரையை ஆய்வு செய்தார்.

இதைத்தொடர்ந்து அவர் கஜா புயல் தொடர்பாக கலெக்டர் கேசவன் மற்றும் அனைத்து துறை அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினார். #GajaCyclone #Kiranbedi
Tags:    

Similar News