செய்திகள்

கஜா புயல் சேத விவர அறிக்கையை முதல்வரிடம் நாளை வழங்குவோம்- அமைச்சர் செங்கோட்டையன்

Published On 2018-11-19 07:45 GMT   |   Update On 2018-11-19 07:45 GMT
தஞ்சை மாவட்டத்தில் புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை நேரில் சென்று ஆய்வு செய்து அதன் அறிக்கைகளை நாளை முதல்வரிடம் வழங்கும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். #GajaCyclone #MinisterSengottaiyan
தஞ்சாவூர்:

கஜா புயலால் டெல்டா மாவட்டங்களான தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்கள் அதிக சேதமடைந்துள்ளது. இதற்காக அனைத்து துறை அதிகாரிகளும், அந்தந்த மாவட்டங்களில் முகாமிட்டு நிவாரண உதவிகள் மற்றும் மீட்பு பணிகளை துரிதப்படுத்தி வருகின்றனர்.

இதற்கிடையே தஞ்சை மாவட்டத்தில் நிவாரண பணிகளை துரிதப்படுத்த அமைச்சர்கள் செங்கோட்டையன், உடுமலை ராதா கிருஷ்ணன், தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, துரைக்கண்ணு, கடம்பூர் ராஜூ, வைத்திலிங்கம் எம்.பி. ஆகியோரை நியமித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இதையடுத்து இன்று தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதற்கு கலெக்டர் அண்ணாதுரை தலைமை தாங்கினார். இதில் அமைச்சர்கள் செங்கோட்டையன், உடுமலை ராதாகிருஷ்ணன், துரைக்கண்ணு, கடம்பூர்ராஜூ ஆகியோர் கலந்து கொண்டு நிவாரண உதவிகளை வழங்கினர்.

நிகழ்ச்சியில் எம்.பி.க்கள் வைத்திலிங்கம், பரசுராமன், பாரதிமோகன், எம்.எல்.ஏ.க்கள் சி.வி.சேகர், தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் துரை.சந்திரசேகரன், ஒரத்தநாடு ராமச்சந்திரன், சாக்கோட்டை அன்பழகன், கோவி.செழியன் மற்றும் அ.தி.மு.க முன்னாள் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் துரை திருஞானம், முன்னாள் மாநகராட்சி மேயர் சாவித்திரி கோபால், பால்வள தலைவர் காந்தி, அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இதைத் தொடர்ந்து அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வமும் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். தற்போது நாங்கள் தஞ்சை மாவட்டத்தில் புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை நேரில் சென்று ஆய்வு செய்து அதன் அறிக்கைகளை கணக்கெடுத்து முதல்- அமைச்சர் நாளை சேத பகுதிகளை பார்வையிட வரும் போது அவரிடம் சமர்பிப்போம்.


இந்த புயலால் அதிக அளவில் தென்னை மரங்கள், வாழை மரங்கள், மின்கம்பங்கள், நெற்பயிர்கள், வெற்றிலை போன்றவை சேதமடைந்துள்ளது. மேலும் ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி ஆகிய பகுதிகள் அதிக அளவில் சேதமடைந்துள்ளது.

அதி நவீன எந்திரங்களுடன் மின் இணைப்புகளை சரி செய்து கொண்டு இருக்கிறோம். மேலும் சில பகுதிகளில் இளைஞர்கள் தாங்களாகவே முன்வந்து மீட்பு பணியில் ஈடுபடுகின்றனர். அப்போது எங்களுக்கு எரிபொருள் தேவை என்கின்றனர். அவர்களுக்கு தேவையான எரிபொருள் உடனடியாக அனுப்பப்படும். மேலும் அவர்கள் செய்த செலவு தொகையும் அவர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார். #GajaCyclone #MinisterSengottaiyan
Tags:    

Similar News