செய்திகள்

பேராவூரணி, நீடாமங்கலம் பகுதியில் வீட்டு சுவர் இடிந்து 2 பெண்கள் பலி

Published On 2018-11-16 16:43 GMT   |   Update On 2018-11-16 16:43 GMT
பேராவூரணி மற்றும் நீடாமங்கலம் பகுதியில் கஜா புயல் தாக்கியதில் வீட்டு சுவர் இடிந்து 2 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

பேராவூரணி:

கஜா புயல் தாக்கியதில் டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான மரங்கள் முறிந்து விழுந்ததில் சாலைகளில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும் அனைத்து இடங்களிலும் மின்கம்பங்கள் சாய்ந்து விட்டன. புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேற்று மாலையில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் மின் விபத்துகள் தவிர்க்கப்பட்டன.

பேராவூரணியை அடுத்த தென்னமங்குடியை சேர்ந்தவர் வள்ளி (65). இவர் அப்பகுதியில் கூரை வீட்டில் வசித்து வந்தார். நேற்று இரவு கூரை வீடு சரிந்து அவர் மீது விழுந்ததில் பரிதாபமாக இறந்தார். இதுபற்றி இன்று காலை தெரியவந்ததும் பேராவூரணி போலீசார் அவரது உடலை மீட்டு பேராவூரணி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

தஞ்சை சீனிவாசபுரம் அருகே உள்ள சேப்பனாவாரியில் வசித்து வருபவர் கலியபெருமாள் (வயது 58) கூலி தொழிலாளி. இவரது வீட்டின் மீது மரம் முறிந்து விழுந்தது. இதில் கலியபெருமாளும் அவரது தாய் முனியம்மாளும் காயமடைந்தனர்.

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே உள்ள கோவில்வெண்ணி கிராமத்தை சேர்ந்தவர் வினாயகம். இவரது மனைவி கனகவள்ளி (வயது 48).

நேற்றிரவு கஜா புயல் காரணமாக அப்பகுதியில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதில் வீட்டு அருகே உள்ள மரம் முறிந்து விழுந்ததில் வீட்டு சுவர் இடிந்து விழுந்தது. இதனால் இடிபாடுகளுக்கிடையே சிக்கி கனகவள்ளி பரிதாபமாக இறந்தார்,

இதுபற்றி நீடாமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News