செய்திகள்

ராஜீவ் கொலையாளிகள் விடுதலை விவகாரம்- கவர்னருக்கு நினைவூட்டல் கடிதம் எழுத தமிழக அரசு பரிசீலனை

Published On 2018-11-04 09:18 GMT   |   Update On 2018-11-04 09:18 GMT
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை குற்றவாளிகள் விடுதலை விவகாரம் தொடர்பாக கவர்னர் பன்வாரிலாலுக்கு கடிதம் எழுதுவது குறித்து தமிழக அரசு ஆலோசித்து வருகிறது. #TNGovernor #Banwarilalpurohit
சென்னை:

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் நளினி, முருகன், பேரறிவாளன் உள்பட 7 பேருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு பின்னர் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.

7 பேரையும் தமிழக அரசு விடுதலை செய்யும் முடிவு எடுக்கலாம் என்றும் இது தொடர்பாக கவர்னருக்கு பரிந்துரை செய்யலாம் என்றும் சுப்ரீம் கோர்ட்டு கடந்த செப்டம்பர் மாதம் தீர்ப்பு கூறியது.

இந்த தீர்ப்பு வெளியானதும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை உடனடியாக கூடி 7 பேரையும் விடுதலை செய்யும் பரிந்துரை தீர்மானம் நிறைவேற்றி கவர்னர் பன்வாரிலால் புரோகித்துக்கு அனுப்பி வைத்தது.

ஆனால் கவர்னர் பன்வரிலால் இதில் இன்னும் முடிவு எடுக்காமல் காலம் தாழ்த்தி வருகிறார். இதனால் 7 பேர் விடுதலையாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. கவர்னர் இதில் விரைந்து முடிவு எடுக்க வேண்டும் என்று தமிழக அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

இந்த நிலையில் தமிழக அரசும் கவர்னர் பன்வாரிலாலுக்கு இது தொடர்பாக கடிதம் எழுதுவது பற்றி ஆலோசித்து வருகிறது. தமிழக அரசின் உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டி கவர்னரின் செயலாளர் ராஜகோபாலுக்கு கடிதம் எழுத உள்ளார்.

அதில் தமிழக அரசின் பரிந்துரையை ஏற்று 7 பேரையும் விடுதலை செய்ய முடிவு எடுக்க வேண்டும் என்று அதில் வலியுறுத்தப்படுகிறது. தற்போது விடுமுறை தினம் என்பதால் தீபாவளிக்குப் பின்பு இந்த கடிதம் கவர்னருக்கு அனுப்பி வைக்கப்படும் என்று கூறப்படுகிறது.

இதற்கிடையே ராஜீவ் கொலையாளிகள் 7 பேரை விடுதலை செய்ய தமிழக அரசு கடந்த 2014-ம் ஆண்டு உத்தரவு பிறப்பித்தது. இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்த வழக்கு நிலுவையில் இருப்பதால் கவர்னர் முடிவு எடுக்கவில்லை, தீர்ப்பு வெளியான பின்பே முடிவு எடுப்பார். இதனால்தான் அமைச்சரவை பரிந்துரை மீது கவர்னர் முடிவு எடுப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. #TNGovernor #Banwarilalpurohit
Tags:    

Similar News