செய்திகள்

வாகனம் பழுது பார்க்கும் கடை உரிமையாளருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம்- கலெக்டர் நடவடிக்கை

Published On 2018-11-03 13:12 GMT   |   Update On 2018-11-03 13:12 GMT
டெங்கு கொசுக்கள் உற்பத்தியை தடுக்காத வாகனம் பழுது பார்க்கும் கடை உரிமையாளருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து கலெக்டர் சுப்பிரமணியன் உத்தரவிட்டார். #DenguFever
விழுப்புரம்:

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. விழுப்புரம் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க கலெக்டர் சுப்பிரமணியன் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறார். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு நேரில் சென்று டெங்கு காய்ச்சல் ஒழிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்.

இதன் தொடர்ச்சியாக, இன்று காலை விழுப்புரம் நகராட்சிக்கு உட்பட்ட வழுதரெட்டி, கவுதம் நகர் ஆகிய பகுதிகளுக்கு கலெக்டர் சுப்பிரமணியன் சென்றார். அங்கு வீடு, வீடாகச் சென்று தண்ணீர் தொட்டிகளில் கொசுப்புழு உள்ளதா எனவும், கழிவுநீர் வாய்க்கால்கள், பழைய டயர்கள், மண்பாண்டங்கள், பிளாஸ்டிக் பொருட்கள், தேங்காய் ஓடுகள், ஆட்டுஉரல்கள் ஆகியவற்றில் நீர் தேங்கி உள்ளதா என அவர் ஆய்வு செய்தார்.

மேலும், அப்பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கும், மாணவ-மாணவிகளுக்கும் டெங்கு காய்ச்சல் குறித்தும், டெங்கு கொசு ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். தாங்கள் வசிக்கும் வீடுகள் உள்ளிட்ட பகுதிகளை சுகாதாரமாக பராமரிக்காவிட்டால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுமக்களை அவர் எச்சரித்தார்.

இதைத்தொடர்ந்து வழுதரெட்டி கவுதம் நகரில் இருந்த ஒரு தனியார் வாகனம் பழுதுபார்க்கும் கடைக்கு சென்று சோதனை செய்தார். அதில் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனம் மற்றும் அடுக்கி வைக்கப்பட்டிருந்த டயர்களில் சுகாதாரமற்ற முறையில் தண்ணீர் தேங்கி டெங்கு கொசுப்புழுக்கள் உற்பத்தியாகி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து டெங்கு கொசுக்கள் உற்பத்தியை தடுக்காத அந்த கடையின் உரிமையாளருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டார். பின்னர் அங்கிருந்து கலெக்டர் சுப்பிரமணியன் புறப்பட்டு சென்றார். #DenguFever
Tags:    

Similar News