செய்திகள்

கருமத்தம்பட்டி அருகே தனியார் கம்பெனி உரிமையாளர் வீட்டில் நகை திருட்டு

Published On 2018-10-29 11:28 GMT   |   Update On 2018-10-29 11:28 GMT
கருமத்தம்பட்டி அருகே தனியார் கம்பெனி உரிமையாளர் வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் நகை திருடப்பட்டது.
சூலூர்:

கோவை கருமத்தம்பட்டி அருகே உள்ள ஊஞ்ச பாளையம் இந்திரா நகரை சேர்ந்தவர் இளவரசன். பேப்ரிக்ஸ் கம்பெனி நடத்தி வருகிறார். இவர் தனது குடும்பத்துடன் உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சிக்காக மேட்டூர் சென்று இருந்தார்.

இன்று காலை வீடு திரும்பினார். அப்போது வீட்டின் முன் பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்த போது பீரோ திறந்து கிடந்தது.

அதில் இருந்த 10 பவுன் நகை திருட்டு போய் இருந்தது. இளவரசன் வீட்டு முன் நிறுத்தி வைத்திருந்த இரு சக்கர வாகனத்தையும் காணவில்லை.

நகையை திருடிய மர்ம நபர்கள் வீட்டில் நிறுத்தப்பட்டு இருந்த இரு சக்கர வாகனத்தையும் திருடி சென்றுள்ளனர்.

இது குறித்து கருமத்தம் பட்டி போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் சண்முகம் மற்றும் போலீசார் விரைந்து சென்றனர்.

கைரேகை நிபுணர்களும் வந்து தடயங்களை சேகரித்தனர். நகையை கொள்ளையடித்த மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சூலூர் அருகே உள்ள கலங்கலில் வேடசாமி கோவில் உள்ளது. இக்கோவிலுக்குள் நேற்று இரவு புகுந்த மர்ம நபர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று அங்கிருந்த மணி, தட்டு உள்ளிட்ட பூஜை பொருட்களை திருடி சென்று விட்டனர்.

கோவிலில் வைக்கப்பட்டு இருந்த வேலும் உடைக்கப்பட்டுள்ளது. இந்த கோவிலில் கடந்த 9-ந்தேதி திருட்டு நடைபெற்றது. மீண்டும் தற்போது பூஜை பொருட்களை மர்ம நபர்கள் திருடி சென்று உள்ளனர்.

சூலூர் பகுதியில் கடந்த சில நாட்களாக கோவிலில் திருடும் சம்பவம் அதிகரித்து உள்ளது.

இதனை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News