செய்திகள்

திருப்பூரில் உள்ள அரசு போக்குவரத்து பணிமனைக்கு ரூ.1 லட்சம் அபராதம் - மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை

Published On 2018-10-28 16:14 GMT   |   Update On 2018-10-28 16:14 GMT
திருப்பூரில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனைக்கு மாநகராட்சி அதிகாரிகள் ரூ.1 லட்சம் அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.
திருப்பூர்:

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கொசுக்களால் காய்ச்சல் உள்ளிட்ட நோய்கள் பரவி வருகிறது. இதை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் திருப்பூர் மாநகர பகுதிகளிலும் டெங்கு கொசு உற்பத்தியை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.

இதற்காக தனிக்குழு அமைக்கப்பட்டு மாநகருக்குட்பட்ட பகுதிகளில் உள்ள வீடுகள், கடைகள், வணிக வளாகங்கள், வர்த்தக நிறுவனங்கள் உள்ளிட்டவைகளில் அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த ஆய்வில் டெங்கு கொசுப்புழுக்கள் உற்பத்தியாகும் வகையில் தண்ணீரை தேக்கி வைத்திருப்பவர்கள் மீது தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் திருப்பூர் மாநகராட்சி நகர்நல அதிகாரி பூபதி தலைமையில் உதவி கமிஷனர் சபியுல்லா, சுகாதார ஆய்வாளர் பிச்சை, சுகாதார அலுவலர் கோகுல்நாதன் உள்ளிட்ட அதிகாரிகள் மாநகருக்குட்பட்ட பல்வேறு இடங்களில் நேற்று காலை முதலே ஆய்வு நடத்தி வந்தனர்.

இதன்படி, திருப்பூர்-காங்கேயம் கிராஸ் ரோட்டில் உள்ள 2 அரசு போக்குவரத்து கழக பணிமனைகளிலும் ஆய்வு செய்தனர். அப்போது அங்கிருந்த கான்கிரீட் தொட்டி, தீயணைக்க பயன்படுத்தப்படும் வாளி உள்ளிட்டவைகளை பார்த்த போது, அதில் நீண்ட நாட்களாக தண்ணீர் தேங்கி நின்றது மட்டுமின்றி டெங்குவை உற்பத்தி செய்யும் புழுக்களும் அதிக அளவில் இருந்தது கண்டறியப்பட்டது.

டெங்கு கொசு உற்பத்தி புழுக்கள் கண்டறியப்பட்டதை தொடர்ந்து அரசு போக்குவரத்து கழகத்திற்கு ரூ.1 லட்சம் அபராதத்தை மாநகராட்சி அதிகாரிகள் விதித்தனர். மேலும், பணிமனை கிளை மேலாளருக்கு விளக்கம் கேட்டு நோட்டீசும் வழங்கப்பட்டது. போக்குவரத்து கழகத்திற்கு அபராதம் விதித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெங்கு கொசுப்புழுக்கள் உற்பத்தியாவதை தடுக்கும் நடவடிக்கை தொடர்ந்து நடைபெறும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.



Tags:    

Similar News