செய்திகள்

திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் பன்றி காய்ச்சல் நோயாளிகளுக்கு தனி வார்டு

Published On 2018-10-23 10:22 GMT   |   Update On 2018-10-23 10:22 GMT
திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தனி வார்டு ஒதுக்கப்பட்டுள்ளது. #Swineflu
திண்டுக்கல்:

பருவமழை தொடங்க உள்ள சூழ்நிலையில் தற்போது ஏராளமானோர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். குறிப்பாக டெங்கு, மலேரியா, பன்றிகாய்ச்சல் தாக்கம் அதிகரித்து வருகிறது.

இதனால் உயிரிழப்புகளும் தொடர்ந்துகொண்டே உள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் டெங்கு மற்றும் பன்றிகாய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

மாவட்ட சுகாதாரத்துறை சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இது குறித்து நலப்பணிகள் இணை இயக்குனர் டாக்டர் மாலதிபிரகாஷ் தெரிவிக்கையில், திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் தற்போது வழக்கத்தை விட கூடுதலாக காய்ச்சல், சளி, இருமல் தாக்கத்தால் நோயாளிகள் வருகின்றனர். அவர்களுக்கு போதிய மருத்துவ உதவிகள் செய்து வருகிறோம்.

டெங்கு பாதிப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. பன்றி காய்ச்சல் அறிகுறி உள்ளதா? என்ற சோதனை நடத்த திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் வசதி இல்லை.

மதுரை அல்லது கோவை அரசு ஆஸ்பத்திரிக்குதான் செல்ல வேண்டும். தனியார் ஆஸ்பத்திரிகளில் ரூ.3500 செலவில் இதற்கான சோதனை நடத்தப்படுகிறது. பன்றி காய்ச்சல் அறிகுறி தென்பட்டால் அவர்களுக்கு திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்படும். அதற்கான மருந்து மாத்திரைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. நோய் தொற்று உள்ளவர்கள் மூலம் மற்றவர்களுக்கு இது பரவும் என்பதால் குடும்பத்தில் உள்ள யாரேனும் ஒருவருக்கு காய்ச்சல் வந்தால் உடனடியாக ஆஸ்பத்திரியில் பரிசோதனை செய்து கொள்வது நல்லது.

குறிப்பாக முதியவர்கள், கர்ப்பிணிகள் ஆகியோரை விரைவில் தாக்கும். வெளியூர்களுக்கு செல்வது, சுகாதாரமற்ற குடிநீரை குடிப்பதை பெரும்பாலும் தவிர்க்க வேண்டும். திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் பன்றி காய்ச்சல் பாதிக்கப்பட்டவர்களுக்கு தனி வார்டு ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினர். #Swineflu

Tags:    

Similar News