செய்திகள்

கொசஸ்தலை ஆற்றின் கரையை உடைத்து மணல் கொள்ளை- 3 பேர் கைது

Published On 2018-09-24 06:26 GMT   |   Update On 2018-09-24 06:26 GMT
மீஞ்சூர் அருகே கொசஸ்தலை ஆற்றின் கரையை உடைத்து மணல் கொள்ளையில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய லாரியும் பறிமுதல் செய்யப்பட்டது.
பொன்னேரி:

மீஞ்சூர் பகுதியில் உள்ள கொசஸ்தலை ஆற்றில் மணல் கொள்ளை நடந்து வருகிறது. போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டும் மணல் கொள்ளையை தடுத்து நிறுத்த முடியவில்லை.

இந்த நிலையில் மீஞ்சூரை அடுத்த பள்ளிபுரம் கொசஸ்தலை ஆற்றில் மணல் திருட்டு நடப்பதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு தகவல் கிடைத்தது. அவரது உத்தரவுப்படி தனிப்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜவேல் தலைமையில் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது கொசஸ்தலை ஆற்றின் கரையை உடைத்து லாரியில் சிலர் மணல் அள்ளிக் கொண்டிருந்தனர். போலீசாரை கண்டதும் அவர்கள் தப்பி ஓட முயன்றனர்.

அவர்களில் கொண்டக்கரையை சேர்ந்த முனுசாமி, மகேந்திரன், சுப்பாரெட்டிபாளையத்தை சேர்ந்த வாசு ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய லாரியும் பறிமுதல் செய்யப்பட்டது. கொசஸ்தலை ஆற்றுப் பகுதியில் மணல் திருடினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரித்துள்ளனர்.
Tags:    

Similar News