செய்திகள்

அமைச்சர் விஜயபாஸ்கருக்கு கொலை மிரட்டல்- திமுக பிரமுகர்களை கைது செய்ய தீவிரம்

Published On 2018-09-20 10:58 GMT   |   Update On 2018-09-20 11:36 GMT
அமைச்சர் விஜயபாஸ்கருக்கு கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் இன்று திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது. #ministervijayabaskar #dmk #gutkha

புதுக்கோட்டை:

குட்கா ஊழலை கண்டித்தும், ஊழலில் சிக்கிய அமைச்சர்கள் பதவி விலக வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் கடந்த 18-ந்தேதி மாவட்ட தலைநகரங்களில் தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்ட தி.மு.க. சார்பில் அங்குள்ள திலகர் திடலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டை வடக்கு மாவட்ட பொறுப்பாளர் செல்லபாண்டியன் அரசு தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. எம். எல்.ஏ.க்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பேசினர்.

இதில் விராலிமலை ஒன்றிய தி.மு.க. செயலாளரும், கடந்த 2016 சட்டமன்ற தேர்த லில் விராலிமலை தொகுதியில் அமைச்சர் விஜயபாஸ்கரை எதிர்த்து போட்டியிட்டவருமான தென்னலூர் பழனியப்பன் மற்றும் அரிமளம் ஊராட்சி ஒன்றிய முன்னாள் தலைவர் பொன்.ராமலிங்கம் ஆகியோர் அமைச்சர் விஜயபாஸ்கரை தரக்குறைவாக பேசி, கொலை மிரட்டல் விடுத்து ஆவேசமாக பேசியதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக புதுக்கோட்டை போலீசில் அ.தி.மு.க. நிர்வாகி கருப்பையா என்பவர் புகார் கொடுத்தார். அதன் பேரில் தென்னலூர் பழனியப்பன், பொன்.ராமலிங்கம் ஆகியோர் மீது அவதூறாக பேசுதல் 294, 323, 301 ஆகிய 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.

இதைதொடர்ந்து தென்னலூர் பழனியப்பனையும், பொன்.ராமலிங்கத்தையும் கைது செய்ய தேடினர். இதற்காக தனிப்படை அமைக்கப்பட்டது. இதில் தென்னலூர் பழனியப்பன் வீடு திருச்சி மன்னார்புரம் நடுத்தெருவில் உள்ளது. அவரை கைது செய்ய இன்று அதிகாலை புதுக்கோட்டை போலீசார், போலீஸ் வாகனத்தில் வந்தனர்.

அவரது வீட்டில் பழனியப்பனை தேடினர். ஆனால் அவர் வீட்டில் இல்லை. அவர் வெளியில் சென்றுவிட்டதாக கூறப்பட்டது. ஆனாலும் தொடர்ந்து புதுக்கோட்டை போலீசார் அவரது வீட்டின் அருகிலேயே நீண்ட நேரமாக காத்திருந்தனர். இதனால் அப் பகுதியில் இன்று காலை பரபரப்பு நிலவியது. இதேபோன்று அரிமளம் ஒன்றிய செயலாளரும், முன்னாள் ஊராட்சி தலைவருமான பொன்.ராமலிங்கத்தையும் கைது செய்ய போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்த சம்பவம் இன்று திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News