செய்திகள்

ராஜீவ் கொலையாளிகளை விடுதலை செய்யக்கூடாது- திருநாவுக்கரசர் பேட்டி

Published On 2018-09-14 07:16 GMT   |   Update On 2018-09-14 10:08 GMT
ராஜீவ் கொலையாளிகளை விடுதலை செய்தால் தவறான முன்னுதாரணம் ஆகிவிடும் என்று திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். #thirunavukkarasar #rajivkillers

ஆலந்தூர்:

தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கோவை செல்லும் வழியில் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

ரபேல் போர் விமான ஊழலை கண்டித்து இன்னும் 2 நாட்களில் தமிழக மாவட்ட தலை நகரங்களில் கண்டன பேரணி நடத்தி மாவட்ட கலெக்டரிடம் மனுகொடுக்க உள்ளோம். இது நாடு முழுவதும் நடைபெறுகிறது. சென்னையில் கவர்னரை சந்தித்து இதுகுறித்து மனுகொடுக்க உள்ளோம். இதில் அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் முகுல் வாஸ்னிக் கலந்து கொள்கிறார்.

அகில இந்திய அளவில் பாரத் பந்த் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. தமிழகத்திலும் வெற்றிகரமாக நடந்தது. இந்த பந்த்துக்கு தமிழக அரசு ஒத்துழைக்க வில்லை. அதனால் பந்த் தோல்வி என்று சொல்லக் கூடாது. கண்ணை மூடிக் கொண்டு தோல்வி என்று சொல்பவர்கள் சொல்லட்டும்.

வருகிற பாராளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா படுதோல்வி அடையும். பா.ஜனதா கூட்டணியில் இருந்து பல கட்சிகள் வெளியேறி உள்ளன. தேர்தலின் போது கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் எதையும் மோடி நிறைவேற்ற வில்லை. மக்களை ஏமாற்றியுள்ளார்.

மக்கள் மோடி மீது கோபமாக இருக்கிறார்கள். அப்படி இருக்கும் போது மோடி எப்படி அதிக இடங்களில் வெற்றி பெறுவார். மத்திய மந்திரி பொன்.ராதா கிருஷ்ணன் பகல் கனவு காண்கிறார். ராகுல்காந்தி பிரதமர் ஆவது உறுதி.

உலக அளவில் கச்சா எண்னை விலை குறைந்திருக்கும்போது தொடர்ந்து இந்தியாவில் பெட்ரோல்-டீசல் விலை அதிகரித்துள்ளது. மத்திய அரசுக்கு மக்கள் மீது அக்கறைஇல்லை. எதிர்க்கட்சிகள் மக்கள் மீது அக்கறை கொண்டு கண்டன ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் நடத்துகின்றன.

அதைப்பற்றி கவலைப்படாமல் தினந்தோறும் மத்திய அரசு பெட்ரோல்- டீசல் விலையை உயர்த்தி வருகிறது. விரைவில் பெட்ரோல்-டீசல் விலை 100 ரூபாயை எட்டிவிடும்.

சுமார் 4½ ஆண்டுகளில் 11 லட்சம் கோடி ரூபாய் மத்திய அரசும், எண்ணை நிறுவனங்களும் லாபமாக பெற்று பலனடைந்துள்ளனர். இதற்கு பா.ஜனதா ஒரு விலை தர வேண்டி இருக்கும். பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா படுதோல்வி அடையும்.

தமிழ்நாட்டில் எந்த கட்சி தலைவர்களுக்கும் பிரதமரை தேர்ந்தெடுக்கும் அருகதை இல்லை என்று மத்திய மந்திரி பொன்.ராதா கிருஷ்ணன் கூறி இருப்பது மிகவும் தவறானது. மக்களை அவமானப்படுத்தும் வகையில் அவரது பேச்சு இருக்கிறது. தமிழகத்தில் 50 எம்.பி.க்கள் இருக்கின்றனர். தமிழ்நாடு இந்தியாவில் தான் இருக்கின்றது என்று பொன்.ராதாகிருஷ்ணன் ஒத்துக் கொள்வாரா?


ராஜீவ்காந்தி படுகொலையில் ஈடுபட்ட 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழக அரசு ஏற்கனவே ஒரு தீர்மானத்தை மத்திய அரசுக்கு அனுப்பியுள்ளது. காங்கிரஸ் சார்பில் அதை நான் எதிர்த்துள்ளேன். ராஜிவ்காந்தி படுகொலை செய்யப்பட்டபோது அங்கிருந்த பொதுமக்கள், காவல்துறையினர் உயிரிழந்துள்ளனர். பலர் ஊனமுற்று உள்ளனர். அவர்கள் எல்லாம் விடுதலை செய்யக் கூடாது என்று தினமும் கூறி வருகின்றனர்.

அந்த 7 பேரில் 4 பேர் வெளிநாட்டினர். தமிழக அரசு பரிந்துரை செய்தது தவறான முடிவு. ஆளுநர் முடிவு செய்வதில் சிரமம் என்பதால் தான் மத்திய உள்துறைக்கு அனுப்பியுள்ளார். இதில் மத்திய அரசும், உள்துறையும் முடிவு எடுக்காது என்று நம்புகிறேன். அப்படி விடுதலை செய்தால் தவறான முன்னுதாரணம் ஆகிவிடும்.

சில அரசியல் கட்சிகள், அமைப்புகள் விடுதலை செய்யவேண்டும் என்று சொல்வதால் விடுதலை செய்யக் கூடாது.

இவ்வாறு அவர் கூறினார். #thirunavukkarasar #rajivkillers

Tags:    

Similar News