செய்திகள்

உடுமலையில் 577 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் - அமைச்சர் வழங்கினார்

Published On 2018-09-10 11:34 GMT   |   Update On 2018-09-10 11:34 GMT
உடுமலையில் 577 பயனாளிகளுக்கு ரூ.47.64 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் வழங்கினார்.
திருப்பூர்:

திருப்பூர் மாவட்டம், உடுமலை தளி சாலை நகராட்சி திருமண மண்டபத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் சார்பில் முதல்-அமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா கலெக்டர் பழனிசாமி தலைமையில் நடைபெற்றது.

விழாவில் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு 577 பயனாளிகளுக்கு ரூ.47.64 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

வரும் காலங்களில் தேர்வு செய்யப்பட்ட அனைத்து பயனாளிகளுக்கும் விலையில்லா ஆடுகள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. காலியாக உள்ள கால்நடை மருத்துவர்கள் விரைவில் நியமிக்கப்படுவதோடு தமிழகத்திலுள்ள அனைத்து கால்நடை மருந்தகங்களும் அனைத்து வசதிகளுடன் தரம் உயர்த்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், கறவை மாடுகள் வழங்கும் திட்டம் முதல்முறையாக மேற்கு மாவட்டங்களிலும் வழங்கப்பட உள்ளது. விவசாயிகளின் வாழ்வு மேம்படுவதற்காக கிராமப்புறங்களில் உள்ளவர்களுக்கு தலா 50 நாட்டுக்கோழிகள் வீதம் முதற்கட்டமாக 77 ஆயிரம் நபர்களுக்கு வழங்கப்படும். இந்த திட்டம் முதல்-அமைச்சரால் தொடங்கப்பட உள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்நிகழ்வின் போது, உடுமலை வருவாய் கோட்டாட்சியர் அசோகன், சமூக பாதுகாப்புத்திட்ட தனித்துணை கலெக்டர் ராகவேந்திரன், தமிழ்நாடு கால்நடை அறிவியல் மருத்துவ பல்கலைக்கழகத்தின் விரிவாக்க கல்விக் குழு உறுப்பினர் துரையரசன், தாசில்தார்கள் தங்கவேல் (உடுமலை), கலாவதி (மடத்துக்குளம்), கூட்டுறவு சங்க தலைவர்கள் மற்றும் முன்னாள் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் உள்ளிட்ட ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News