செய்திகள்

மேலூரில் இன்று கடைகள் முன்பிருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றம்

Published On 2018-09-03 10:35 GMT   |   Update On 2018-09-03 10:35 GMT
மேலூர் பஸ் நிலையம் முதல் அரசு கல்லூரி வரை இருபுறமும் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி இன்று காலை தொடங்கியது. அசம்பாவிதம் நடக்காமல் இருக்க போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

மேலூர்:

மேலூரில் கடந்த சில மாதமாக போக்குவரத்து நெரிசல் காரணமாக அடிக்கடி விபத்து ஏற்பட்டது. இதில் உயிரிழப்பு நேர்ந்தது. இவற்றுக்கு மதுரை -திருச்சி நெடுஞ்சாலையில் 2 கி.மீ. தூரத்திற்கு கடைகள் முன்புள்ள ஆக்கிரமிப்பே காரணம் என்று வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் குற்றம் சாட்டினர். சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமும் புகார் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து ஆக்கிரமிப்புகளை அகற்ற முடிவு செய்யப்பட்டது.

அதன்படி மேலூர் பஸ் நிலையம் முதல் அரசு கல்லூரி வரை இருபுறமும் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி இன்று காலை தொடங்கியது.

மேலூர் போலீஸ் துணை சூப்பிரண்டு சக்கரவர்த்தி தலைமையில் நெடுஞ்சாலைத்துறை உதவி இயக்குநர் சீனிவாசன், நகராட்சி கமி‌ஷனர் கண்ணன், தாசில்தார் சரவணன் ஆகியோர் முன்னிலையில் சாலையின் இருபுறமும் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

ஆக்கிரமிப்பு அகற்றத்தின் போது அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் தடுக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. ஆக்கிரமிப்பு அகற்றத்தை அந்தப்பகுதி மக்கள் வரவேற்று அதிகாரிகளை பாராட்டினர்.

Tags:    

Similar News