செய்திகள்

அரசியலுக்காக முதல்வர் மீது ஊழல் குற்றச்சாட்டுக்களை சுமத்துகின்றனர்- தம்பிதுரை

Published On 2018-08-25 07:14 GMT   |   Update On 2018-08-25 07:14 GMT
அரசியலுக்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது எதிர்க்கட்சிகள் ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்துவதாக பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை கூறியுள்ளார். #ADMK #ThambiDurai #EdappadiPalaniswami #Scam
கரூர்:

கரூரில் இன்று பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை நிருபர்களிடம் கூறியதாவது:-

முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்துவது அரசியலுக்காகத்தான். ஆளும் எந்த கட்சியாக இருந்தாலும், அந்த கட்சிகள் மீது எதிர்கட்சிகள் ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்துவது வாடிக்கையாகிவிட்டது.

ஆனால் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மறைந்த முதல்வர் ஜெயலலிதா வழியில் சிறப்பாக ஆட்சி செய்து வருகின்றனர். எதிர்கட்சிகள் எதையும் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க வேண்டும். தனக்கு பயமில்லை எனவும், எதையும் சந்திக்க தயாராக உள்ளோம் என முதல்வரே கூறியுள்ளார். ஆகவே இந்த அ.தி.மு.க. அரசு எதற்கும் பயப்படாது.

முல்லை பெரியாறு அணை பகுதியில் மட்டும் மழை பொழிந்து கேரளாவில் வெள்ளம் ஏற்படவில்லை. பாலக்காட்டிலும் மழை பெய்துள்ளது. பாலக்காட்டில் பெய்த மழை நீர் முல்லை பெரியாறு அணைக்கு வந்ததா?. அங்கு இருக்கும் கம்யூனிஸ்ட் மற்றும் காங்கிரஸ் கட்சியினர் போட்டி போட்டுக்கொண்டு அரசியலுக்காக இது போன்ற பொய் குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றனர்.


எதிர்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின் இந்த ஆட்சியில் ஊழல், கமி‌ஷன் நடைபெறுவதாக கூறி வருகிறார். தி.மு.க. ஆட்சியில் தான் ஊழல் குற்றச்சாட்டுகளுக்காக சர்க்காரியா ஊழல் விசாரணை கமி‌ஷன் அமைக்கப்பட்டது. 2ஜி ஸ்பெக்ட்ரம் போன்ற ஊழல்கள் நடைபெற்றது.

2 ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் கீழ் கோர்ட்டில் தான் தி.மு.க. விடுதலை பெற்றுள்ளது. ஆனால் மேல்மட்ட கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின் தி.மு.க. ஆட்சியில் நடைபெற்ற ஊழல் புகார்களைத்தான் இன்றுவரை கூறி வருகிறார்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் கீதா உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் இருந்தனர். #ADMK #ThambiDurai #EdappadiPalaniswami #Scam
Tags:    

Similar News