செய்திகள்

கன்னியாகுமரி அருகே கல்லூரி மாணவியை கடத்திய வாலிபர்

Published On 2018-08-23 13:09 GMT   |   Update On 2018-08-23 13:09 GMT
கல்லூரி மாணவியை கடத்தி சென்ற வாலிபர் குறித்து மாணவியின் தாய் போலீசில் புகார் செய்தார். இந்த சம்பவம் குறித்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கன்னியாகுமரி:

கன்னியாகுமரி அருகே உள்ள கோவளம் பகுதியை சேர்ந்த ஒரு தம்பதிக்கு 17 வயதில் மகள் உள்ளார். அவர் கன்னியாகுமரி பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். அவர் தினமும் கல்லூரிக்கு வீட்டில் இருந்து பஸ்சில் சென்று வருவது வழக்கம்.

கடந்த 20-ந்தேதி காலையில் கல்லூரிக்கு சென்று விட்டு மாலையில் வீடு திரும்பிய அந்த மாணவி வீட்டில் இருந்தார். இரவு உணவிற்கு பிறகு தனது அறைக்கு அவர் தூங்கச் சென்றுவிட்டார். நள்ளிரவில் அந்த மாணவியின் தாயார் விழித்துப்பார்த்த போது மகள் அங்கு இல்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் மகளை தேடிபோது அவர் வீட்டில் இருந்து வெளியேறி சென்று இருந்தது தெரியவந்தது. இது பற்றி தனது குடும்பத்தினரிடம் அவர் தெரிவித்தார். அவர்களும் அந்த மாணவியை பல இடங்களிலும் தேடியும் கண்டு பிடிக்க முடியவில்லை.

இதற்கிடையில் மாணவியின் தாயார் கன்னியாகுமரி அனைத்து மகளிர் போலீசில் ஒரு புகார் செய்தார். அந்த புகாரில் கன்னியாகுமரியை சேர்ந்த பிரவீன் என்ற வாலிபர் தனது மகளை காதலித்து வந்ததாகவும், அவர் கடத்திச் சென்றுவிட்டதாகவும் கூறி உள்ளார். இதுபற்றி இன்ஸ்பெக்டர் சாந்தி வழக்குபதிவு செய்து பிரவீனையும், அந்த மாணவியையும் தேடி வருகிறார்கள்.

இதேபோல் ராஜாக்கமங்கலம் மணியன்விளை பகுதியை சேர்ந்தவர் செல்ல சிவலிங்கம். இவரது மகள் ஸ்ரீஜா (வயது 23). இவர் என்ஜினீயரிங் கல்லூரியில் சிவில் பிரிவில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.

சம்பவத்தன்று வீட்டில் இருந்து கல்லூரிக்கு செல்வதாக பெற்றோரிடம் கூறி விட்டுச் சென்றார். ஆனால் கல்லூரி முடிந்து நீண்ட நேரம் ஆகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அவரை தேடி கல்லூரிக்கு சென்றனர். ஆனால் அவர் அங்கு இல்லை. இதையடுத்து அவரை உறவினர்கள் வீடு, தோழிகள் வீடு உள்பட பல இடங்களில் தேடி பார்த்தனர். எங்கும் அவர் இல்லாததால் இது குறித்து ராஜாக்கமங்கலம் போலீசில் புகார் செய்தார். 

இன்ஸ்பெக்டர் தங்கராஜ், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அய்யம்பெருமாள் ஆகியோர் வழக்கு பதிவு செய்து மாயமான கல்லூரி மாணவியை தேடி வருகிறார்கள்.
Tags:    

Similar News