செய்திகள்

கேரள மக்களுக்கு அரசு ஊழியர்கள் ஒருநாள் சம்பளத்தை வழங்க வேண்டும்- புதுவை கவர்னர் வேண்டுகோள்

Published On 2018-08-18 07:12 GMT   |   Update On 2018-08-18 07:12 GMT
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு அரசு ஊழியர்கள் ஒருநாள் சம்பளத்தை வழங்க வேண்டும் என்று புதுவை கவர்னர் கிரண்பேடி வேண்டுகோள் விடுத்துள்ளார். #PuducherryGovernor #Kiranbedi
புதுச்சேரி:

புதுவை நகர பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூய்மை பணிகள் குறித்து வார இறுதி நாட்களில் கவர்னர் கிரண்பேடி ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

அதன்படி இன்று (சனிக்கிழமை) கவர்னர் கிரண்பேடி உழவர்கரை நகராட்சி பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூய்மை பணிகள் குறித்து அதிகாரிகளுடன் சைக்கிளில் சென்று ஆய்வு செய்தார். பின்னர், கவர்னர் கிரண்பேடி நிருபர்களிடம் கூறியதாவது:-

கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மாநிலத்தில் பிரதமர் மோடி இன்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார். கேரள அரசுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் பிரதமர் மோடி செய்வார்.

இருந்தபோதிலும் வெள்ளதால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மக்கள் விரைவில் இயல்பு நிலைக்கு திரும்புவதற்கு இந்தியாவில் உள்ள அனைத்து மாநில மக்களும் மற்றும் அரசு ஊழியர்களும் தங்களுடைய ஒரு நாள் சம்பளத்தை பிரதமரின் நிவாரண நிதிக்கு அளிக்க வேண்டும்.


வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மக்களுக்கு உதவ வேண்டும். கேரள மக்கள் வெள்ள பாதிப்பில் இருந்து விரைவில் மீண்டு வர நாம் அனைவரும் சேர்ந்து இறைவனிடம் பிரார்த்தனை செய்ய வேண்டும்.

முப்படையை சேர்ந்த வீரர்கள் கேரளாவில் மீட்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். நாம் அனைவரும் கேரளாவை நேசிப்பதால் நம்மால் இயன்ற உதவிகளையும் செய்ய வேண்டும்.

இவ்வாறு கிரண்பேடி கூறினார்.

தொடர்ந்து நிருபர்களின் கேள்விகளுக்கு கவர்னர் கிரண்பேடி பதிலளிக்கும் போது, புதுவையில் முதலில் போலீசார் மற்றும் அரசு ஊழியர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணியும் சட்டத்தை மதிக்க வேண்டும். இருசக்கர வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும். இதன்மூலம் பொதுமக்களுக்கு தானாக விழிப்புணர்வு ஏற்படும் என்றார். #PuducherryGovernor #Kiranbedi
Tags:    

Similar News